இலங்கை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள மழையும், வெள்ளமும் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. அனர்த்தத்தில் சிக்குண்டு இதுவரை 169பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 112பேர் காணாமல் போயிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய மாவட்டங்களாக எட்டு மாவட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை, கண்டி, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.
ஜின் கங்கை, களனி கங்கை, களு கங்கை, போன்ற பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், மேலும் நீர் மட்டம் உயருமாக இருந்தால் இந்த ஆறுகள் உடைப்பெடுக்கும் ஆபத்தும் இருப்பதால் இந்த ஆறுகளின் அருகில் குடியிருப்போர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தாக்கங்களை எதிர்பார்க்கும் நிலையிலும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையிலும், கொழும்பு, கம்பஹ, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இயற்கை அனர்த்தத்திற்குள் சிக்குண்டு ஒரு இலட்சம் முதல் நான்கு இலட்சம்வரையானவர்கள் தமது இருப்பிடங்களை இழந்து தற்காலிக இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மக்களுக்கு அரசாங்கம் மட்டும் நிவாரண உதவிகளை வழங்க முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளிடமும் இலங்கை அரசாங்கம் உதவிகளை கேட்டிருந்தது.
அதற்கு அமைவாக முதலில் இந்தியா இரண்டு கப்பல்களில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியிருப்பதுடன், மீட்பு நடவடிக்கைகளில் இலங்கைப் படையினருக்கு உதவுவதற்காக படையினரையும், படகுகள் மற்றும் உபகரணங்களையும் வழங்கியுள்ளது. அடுத்ததாக சீனாவும் பெருந்தொகையான உதவிப் பொருட்களை அனுப்பி உதவியுள்ளது. ஜப்பான், பாக்கிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளும் தமது அனுதாபத்தையும், உதவியையும் வழங்கியுள்ளன.
உள்நாட்டில் ஊடக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பொருட் சேகரிப்பிலும், உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் ஈடுபட்டுள்ளன. தென்பகுதியில் ஏட்பட்டிருக்கும் இந்த பாரிய அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வட இலங்கையிலிருந்தும் மக்கள் உதவ வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் எமது மக்கள் தமது உதவிக்கரங்களை இந்த மக்களுக்காக நீட்ட வேண்டும். தம்மால் முடியுமான அத்தனை உதவிகளையும் வழங்க வேண்டும். தேசிய நல்லிணக்கம் என்பது, அரசின் அறிக்கைகளால் ஏற்படுத்தப்படுவதல்ல. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாம் இலங்கையர் என்றும் நாட்டில் எந்தப் பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அது எனது நாட்டின் சகோதரர்கள் என்றும், அவர்களுக்கு முதலில் நான் உதவவேண்டும் என்றும் நாம் முன்வருவதிலேயே தங்கியிருக்கின்றது.
யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குறுகிய நாட்களுக்குள் இறந்தபோது நாம் அனுபவித்த வலிகளையும், துயரத்தையும்போலவே இன்று தென் இலங்கையில் மக்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இழப்பையும், துயரத்தையும் அனுபவித்தவர்கள் என்றவகையில் வடக்கு கிழக்கிலிருந்து எமது உதவியை தென் இலங்கை மக்களுக்கு நாம் வழங்க வேண்டும்.
இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர். பொதுபல சேனா, ராவணா சேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்கள் சிங்களம் என்றும் பௌத்தம் என்றும் ஊரில் வேலையற்று நின்றவர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்களுக்கு காவிக்கலர் ஆடையும் கொடுத்து இனவாத தீயைப் பரப்பிக்கொண்டு இருந்தார்கள்.
அவர்களின் போக்கை அவதானித்தவர்கள் கூறிய கருத்தானது, திடீரென்று ஒரு இடத்தில் பாரிய இனக்கலவரத்தை பொதுபல சேனாவினர் தொடங்கப் போகின்றார்கள் என்பதாகவே இருந்தது.
பொதுபல சேனாவினர் அதன் தலைவர் ஞானசேரவின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்டபோதும் அதை முஸ்லிம்கள் தாங்கிக் கொண்டு இருந்துவிட்டார்கள். எங்கேயேனும் ஒரு இடத்தில் பொதுபல சேனாவின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களை முஸ்லிம்கள் ஆரம்பித்திருந்தால், அங்கே இன வன்முறை வெடித்திருக்கும். அதைத் தொடர்ந்து நாடு பூராகவும் சிங்கள முஸ்லிம் இன மோதல்கள் தீயாய் பரவியிருக்கும். நல்லவேளையாக பொதுபல சேனாவின் தூண்டுதல்களுக்கு முஸ்லிம்கள் எடுபடவில்லை.
இலங்கை இனவன்முறைகளுக்கு இலக்காகியிருந்தால் தீச்சுவாலைகள் வானை முட்டியிருக்கும், இரத்த ஆறு பாய்ந்திருக்கும், அவலக் குரல்கள் நாடுபூராகவும் ஒலித்திருக்கும் அத்தகைய ஒரு சம்பவம் நாட்டில் நடைபெற்றிருந்தால் இலங்கை நாடு மீண்டுமொரு அழிவுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றது இந்த இயற்கை அனர்த்தம் என்று கூறுகின்றவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியிருப்பதே அதிர்ச்சி தரக்கூடிய இழப்புக்கள் என்று கூறப்படுகின்ற நிலையில், பொதுபல சேனாவினர் தொடங்கியிருக்கும் இனவன்முறைகள் பலரை பலியிடுவதற்கும், பலரை அவலத்திற்குள் தள்ளிவிடுவதற்கும் காரணமாக அமைந்திருக்குமென்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அத்தகைய இனவன்முறைக்குக் காரணமான கலகொட அத்தே ஞானசேரவைக் கைது செய்வதற்கு பல பொலிஸ் குழுக்களை அரசாங்கம் அமைத்துள்ளபோதும் ஞானசேரவை இன்னும் கைது செய்யமுடியவில்லையாம். ஞானசேர என்ன? காட்டுக்குள் மறைந்திருக்கும் விரப்பனா? அல்லது விடுதலைப் புலிகளின் தலைவரைப்போல் பலவேறு படைக்கட்டமைப்புக்களுடன் காட்டுக்குள் யாராலும் நெருங்க முடியாமல் இருந்த பிரபாகரனா? இல்லையே
மிஞ்சிப்போனால் பத்துப் பதினைந்து அடிவருடிகளுடன் ஏதோ ஒரு பன்சாலைக்குள் அல்லது யாரேனும் ஒரு அரசியல் வாதியின் மாளிகைக்குள் வசதிகளுடன் பாதுகாப்புக்களுடன் இருக்கும் இனவெறிபிடித்த நபர் என்பது இரகசியமானதல்ல.
ஞானசேரவை முன்னர் மகிந்த ராஜபக்சதான் பின்புலத்திலிருந்து இயக்குவதாக சிறுபான்மை மக்கள் நம்பினார்கள். அந்த சந்தேகத்தை வலுவடையச் செய்தது, பொதுபல சேனாவினரின் அலுவலக திறப்பு வைபவத்தில் மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமாக இருந்த கோட்டபாய ராஜபக்ச கலந்துகொண்டதுதான்.
இன்றுவரையும் அந்தச் சந்தேகமும் இருந்துவந்தாலும், தற்போது ஞானசேரவைத் குழு அமைத்துத் தேடுவதாகவும், இன்னும் பிடிபடவில்லை என்றும் கூறுவதைப் பார்க்கும்போது மகிந்த ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தில் இருந்த அதே தரப்புகள் இந்த அரசாங்கத்திலும் அதே ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டு ஞானசேரவைப் போன்றவர்களை இயக்குகின்றார்களோ என்ற சந்தேகம் வலுக்கின்றது.
அரசியல் அதிகாரமும், வெளிநாடுகளின் பணமும் இந்த இனவாதிகளுக்கு தாராளமாகவே கிடைக்கின்றது. அந்த துணிச்சலிலேயே இனவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக துணிச்சலாகவும், சட்டம், நீதிக்கு கட்டுப்படாமலும் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.
முன்னைய ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் முக்கிய அமைச்சில் இருந்து கொண்டு, வெள்ளை உடைக்குள் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கும் சிலரே இந்த இனவாதிகளின் அடைக்களமாக இருக்கக்கூடும். அவ்வாறு இல்லாவிட்டால் ஞானசேராவைக் கைது செய்வதும் நீதியின் முன் நிறுத்துவதும் முடியாத காரியமாக நல்லாட்சியிலும் இருக்காது.
ஞானசேரவைக் கைது செய்வது என்று கூறப்படுவது ஒரு நாடகமாக மாறாமல் இடையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் அது தடுக்கப்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் இந்தக் கைதும் தேடுதல் படலமும் நல்லாட்சியின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக அமைந்திருக்கும்.
இப்போது நாட்டு மக்களின் முழுக்கவனமும் இயற்கை அனர்த்தம் தொடர்பாகவும், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாகவும் மாறியிருக்கின்றது. இப்போது நாட்டு மக்களின் கோபமும், விமர்சனமும் இடர்முகாமைத்துவ அமைச்சுக்கு எதிராகவும், நாட்டின் தலைவர்களுக்கு எதிராகவுமே திரும்பியிருக்கின்றது.
ஏன் என்றால் இலங்கை நாட்டில் எந்தெந்தக் காலங்களில் பரவப்பெயர்ச்சி மழை பெய்கின்றது என்பதையும் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும் என்பதையும், தாக்கங்களை எவ்வாறு முன்கூட்டியே தடுப்பது என்பதைப்பற்றியுமே சதா சிந்தித்து அந்த அமைச்சு செயலாற்றியிருந்தால், மக்களுக்கு முன்னெச்சரிக்கைகளை வழங்கியிருந்தால் இத்தனை அழிவுகளும் இழப்புக்களும் ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என்பதே மக்களின் கோபத்திற்குக் காரணமாகும்.