சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.
அத்தோடு, 103 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 112 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோரை மீட்கும் நடவடிக்கையில் முப்படையினரும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை அனர்த்தத்தால் இதுவரை 545,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை, இன்னும் ஒரு சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில், மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் பின்னர் ஏற்பட்ட மோசமான இயற்கை அனர்த்தமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.