நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணி களை நிறுத்துமாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாண செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருவதாகவும் அதனை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நயினாதீவில் அமைக்கப்படும் புத்தர் சிலைக்கு முறையான அனுமதிகள் எவையும் பெறப்படவில்லை எனப் பல குற்றச் சாட்டுகள் எழுந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வைச் சந்தித்த போது, நயினாதீவில் அமைக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் சுட்டிக்காட்டி னோம். அதனை ஆராய்ந்த அவர் அதன் பணிகளை நிறுத்துமாறு உரியவர்களுக்குப் பணித்தார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
“நயினாதீவில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பில் முறையான அனுமதிகள் பெறப்படவில்லை. அத்துடன், கரையோரப் பாதுகாப்பு திணைக்களமும் எவ்வித அனுமதிகளையும் வழங்கவில்லை. எனினும் கடற்படையின் உதவியுடன் கட்டுமானப் பணிகள் தற்பொழுதும் இடம்பெறுகின்றன” என்று மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் சுட்டிக்காட்டினர்.
ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பதிலளித்தார்.