சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடத்தில் சிறுநீர் கழிக்க முயன்ற இளம்பெண் ஒருவருக்கு அந்நாட்டு பொலிசார் 1,000 பிராங்க் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள லூசேர்ன் நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெனிவா நகரை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் நண்பர்களுடன் லூசேர்ன் சென்றுள்ளார்.
இரவு நேரம் என்பதால் அனைவரும் உற்சாகமாக மது அருந்துவிட்டு உற்சாகமாக இருந்துள்ளனர். அப்போது, இயற்கை உபாதை காரணமாக இளம்பெண் கழிவறையை தேடிச் சென்றுள்ளார்.
ஆனால், கழிவறை இல்லாத காரணத்தினால் சாலையிலேயே சிறுநீர் கழிக்க முயன்றுள்ளார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த இரண்டு பொலிசார் உடனடியாக விரைந்து வந்து தடுத்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. பொதுஇடத்தை அசுத்தம் செய்ய முயன்ற குற்றத்திற்காக இளம்பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர், விசாரணையின் முடிவில் அவருக்கு பொலிசார் 1,000 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுநீர் கழிக்க முயன்றதற்காக தனக்கு அபராதம் விதிக்கப்பட்டது சரியானது அல்ல என இளம்பெண் வாக்குவாதம் செய்துள்ளார்.
பொலிசாரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த இளம்பெண் அபராத தொகையை தவணை முறையில் கட்டி வந்துள்ளார்.
இவ்விவகாரம் தற்போது நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் இது குறித்து ஒரு நிரந்தர தீர்வு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.