ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்ஸ்வான் மாவட்டம், சாய்டா கிராமத்தில் வசிக்கும் சுபாஷ் என்பவரின் 7 மாத பெண் குழந்தை கடந்த மாதம் 26-ம் தேதி காணாமல் போனது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது, அதே பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி கர்மு என்பவரைக் காணவில்லை.
இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுபாஷ் வீட்டின் அருகில் வசிக்கும் பதோய் என்பவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, குழந்தையை கடத்தி நரபலி கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கர்மு மற்றும் பதோய் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி துணைக்கோட்ட காவல் அதிகாரி சந்தீப் பகத் கூறுகையில், ‘பாம்பாட்டி வித்தை தொழில் செய்யும் பதோய்க்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், குழந்தைகள் இல்லை. எனவே, குழந்தையை நரபலி கொடுத்து கடவுளை சாந்தப்படுத்தினால் தனது மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நினைத்துள்ளார்.
இதற்காக மந்திரவாதி உதவியுடன் குழந்தையை கடத்தி, திருல்டிக் நதிக்கரையில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்று கொலை செய்துள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம் பதோய் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. குழந்தையின் உடலைத் தேடி வருகிறோம்’ என்றார்.