தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் நாடகம் முடிவுக்கு வரும்போதே, இரு அணிகளின் இணைப்பு சாத்தியாகும் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கின்றோம். தர்மயுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்த அணியினர் பல்வேறு விதமான நாடகங்களை நடத்தி வருகின்றனர். அந்த நாடகம் முடிவுக்கு வரும்போதுதான் இணைப்பு சாத்தியாகும்.
ஜெயலலிதாவின் இறப்பிலுள்ள மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என்றால் நீதி விசாரணை ஆணையகம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.
அதேபோல் ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து அ.தி.மு.க விடுபட வேண்டும். அதுவரை எங்களது கோரிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மேலும் ஜெயலலிதாவின் கொள்கை அடிப்படையில் நன்மை பயக்கின்ற எந்தவொரு திட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவு தருவோம். தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.