உடல் நலக் குறைவால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படும் மூன்று இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் ஞானசாரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் விசேட பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. எனினும், அவருக்கு உடல் நலம் குன்றியுள்ளதாக அவர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாவே குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், அவ்வாறு சோதனை நடத்தப்பட்ட இடங்களில் ஞானசாரர் இருக்கவில்லையென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஞானசாரரை கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவரது கைதினை உயர்மட்ட அரசியல் சக்திகள் தடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.