மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுப்பதற்கு சிறப்பு உயர்நீதிமன்றத்தை உருவாக்க அரசு முடிவுசெய்திருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்பாக நிறுத்துவோம் என்று தேர்தல் காலத்தில் அரசு வாக்குறுதி வழங்கியிருந்தது. எந்தவொரு வழக்கும் விசாரித்து முடிக்கப்படவில்லை.
அதனையடுத்து, இவ்வாறான வழக்குகள் எதிர்வரும் 2 வருடங்களுக்குள் நடத்திமுடிப்பதற்கு வசதியாக இத்தகைய நீதிமன்றங்களை நிறுவவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசின் முக்கிய அமைச்சர்கள் ஆகியோருக்கு சட்ட நிபுணர்கள் விளக்கிக் கூறியுள்ளனர்.
இந்தப் பரிந்துரையை கவனத்தில் எடுத்த அரசு, சிறப்பு உயர் நீதிமன்றத்தை நிறுவுவதற்கு முடிவெடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. நீதிச் சட்டத்தின்கீழ், நீதி அமைச்சரின் கோரிக்கையின் அடிப்படையில் பிரதம நீதியரசர் இதுபோன்ற சிறப்பு நீதிமன்றத்தை நிறுவமுடியும்.
இதற்கான வேண்டுகோளை மிக விரைவில் நீதி அமைச்சர் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் காலத்தில் முன்னைய அரசில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தும், நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.