வடக்கு மாகாண சபை வினைத்திறனாக இயங்க வேண்டும் எனில் வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சுக்களில் பல்வேறு மோசடிகள் முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த வகையில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு , இரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட அரச அதிபர் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர் வட மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு விசாரணை செய்யப்பட்ட முறைப்பாடுகளில் ஊழல், நிதி மோசடி, நிர்வாக ரீதியிலான முரண்பாடுகள், நியமனம் சார்பான பதவி விடயங்களும் உள்ளடக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தது.
இவ் விசாரணைகள் முடிவுற்றமையை தொடர்ந்து கடந்த மாதம் குறித்த விசாரணை குழுவின் இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அவ்வாறு கையளிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விபரங்கள் 4 அமைச்சர்களுக்கும் முதலமைச்சரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுக்களில் அதிகமானவை எண்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடமாகாண கல்வி அமைச்சருக்கு எதிரான நிர்வாக ரீதியான குற்றச்சாட்டுக்கள் பல எண்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன் சுகாதார அமைச்சர் மற்றும் மீன்பிடி அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பகுதியளவில் நிரூபிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது. குறிப்பாக நிதி மோசடிகள், நியமனங்கள், இடமாற்றங்கள் தொடர்பாக தேவையற்ற தலையீடுகள், வினைத்திறன் அற்ற செயற்பாடுகள் போன்ற குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதனால் வடமாகாண சபை வினைத் திறனாக இயங்க வேண்டும் எனில் அதிகளவில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவர் பதவி விலக வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய முறையற்ற செயற்பாடுகளுக்கு அமைச்சர்களுடன் உடந்தையாக இருந்த அமைச்சின் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.