தேர்தல் ஆணையத்திற்கு இலஞ்சம் வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பயத்தால் அமைச்சர்கள் தன்னை விலக கூறியதாகவும் அதனால் கட்சியில் இருந்து தான் விலகியதாகவும் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக சென்ற தினகரன் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை நடத்துவதற்காகவே சசிகலாவை சந்திக்க பெங்களூர் செல்வதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் தமிழகத்தில் இடம்பெறும் ஆட்சியில் தாங்கள் ஒரு போதும் தலையீடு செய்யமாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
அ.தி.மு.க. அம்மா அணி என்பது ஒன்று தான் என்றும் அதனை யாரும் பிரிக்க முடியாது என்றும் அ.தி.மு.க. ஒன்றாக செயற்பட தான் பாடுபடுவேன் என்றும் இதன் போது அவர் கூறினார்.
கட்சியையும், அ.தி.மு.க.வின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை முன்வைப்பதாகவும் அதற்கு தான் எப்போது உறுதுணையாக இருப்பேன் என்றும் தினகரன் தெரிவித்தார்.