தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியொருவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
11 வயதான இந்த சிறுமி நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள சிறுமி குடும்பத்தில் ஒரே குழந்தை என்பதுடன், அவரது தந்தை வெளிநாடு சென்றுள்ளார்.
சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரின் தாய், அவரை மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இதில் பயன் ஏதும் இல்லாததால் தாய், அவரை ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும் அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளர்கள் நிறைந்து காணப்பட்டமையால் சிறுமி, நோயாளர் காவு வண்டி ஊடாக நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றியனுப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்னர் டெங்கு நோய் அதிகரித்தமையால் அச் சிறுமி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.