அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று பெங்களூர் சிறையில் உள்ள பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சென்றிருந்தனர்.
சசிகலாவை சந்தித்து விட்டு வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கு 60 நாட்கள் பொறுத்து இருக்குமாறு சசிகலா கூறியதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை டி.டி.வி.தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன் (செய்யாறு), பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), பாப்புலர் முத்தையா (பரமக்குடி), ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு) ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதுகுறித்து வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறுகையில், நாங்கள் ஒன்றும் பலப்பரீட்சைக்கு இறங்கவில்லை. தினகரனுக்கு ஆதரவாக 67-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் பொது மக்கள் மத்தியில் எங்களை அசிங்கப்படுத்தும் விதமாக பேட்டி கொடுக்கிறார். இந்த போக்கு நல்லதல்ல என்றார்.
மேலும் அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேச திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.