பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை முன்னெடுப்பதில் பாலித தெவரப்பெரும மற்றும் நளின் ஜயதிஸ்ஸ ஆகியோர் சிறப்பாக செயற்பட்டதாக நாமல் ராஜபக்ஸ பாராட்டியுள்ளார்
சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றில் வாரம் தோறும் குரக்கன் வாசனை என்ற தலைப்பில் நாமல் ராஜபக்ஸ கருத்துகள் அடங்கிய வரிகளை எழுதி வருகின்றார்.
இன்று வெளியாகும் குறித்த கருத்து வரிகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மற்றும் நிவாரண சேவைகள் குறித்து அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளில் அரசாங்கம் தோல்வியடைந்திருந்தது. அரசாங்கத்தை விட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரண சேவைகளில் முன்னின்று செயற்பட்டிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் ஜே.வி.பி.யின் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் அனர்த்த நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஒருசிலர் எனது நிவாரணப் பணிகள் குறித்தும் நான் போலியாக நடிப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விமர்சித்திருந்தனர். ஆனாலும் அவர்களில் யாரும் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் பக்கமே போகவில்லை. அந்த வகையில் நான் என்னால் முடிந்ததை செய்துள்ளேன்.
எனவே என்னை விமர்சிப்பவர்கள் அதனைக் கைவிட்டு, என்னை விமர்சிப்பதற்காக செலவிடும் நேரத்தையும் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக செலவிட முன்வர வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஸ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.