முல்லைத்தீவில் நடைபெரும் சில குற்றச்செயல்களை முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் ஊடகங்களின் செய்திகள் மூலமே அறிகின்றனர் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக சங்கத்தின் உறுப்பினர் ஒருவரை நேற்று மாலை பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றங்கள் தொடர்பான செய்திகளை பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிப்பதில் ஊடகவியலாளர்கள் பின் நிற்கின்றனர் என்று கவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒரு குற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொலிஸ் நிலையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பொலிஸாரிடம் கேள்வி கேட்டால் அவர்கள் பதில் கூற மறுக்கின்றனர். மாறாக ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் இரகசியமான முறையிலே தான் பொலிஸ் நிலையங்களில் தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது ஊடகத்திற்கு தகவல் வழங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலைய அதிகாரிக்கு அடையாளம் காண்பிப்பதையே ஊடகவியலாளர்கள் விரும்பவில்லை.
இவ்வாறான நிலைமையை மாற்றி சுதந்திரமாக ஊடகவியளாலர்கள் பொலிஸாரிடம் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்தலின் மூலம் குற்றச்செயல்களை பொலிஸார் நேரடியாகவே அறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.