யுத்த காலத்தை விட கிழக்கில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கு நடக்கின்ற அநீதிகளுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-
”யுத்தகாலத்தில் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த இரண்டாயிரம் சிங்கள மக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக நாட்டை ஆட்சி செய்துவரும் அரசியல்வாதிகளிடம் பல சந்தர்ப்பங்களில் விவாதத்தில் ஈடுபட்டேன்
அப்போது, தமிழ் மக்களின் தலைவர்கள் என சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் இது இனத்துவேசம் என என் மீது குற்றஞ்சாட்டினர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்விகற்பதற்கான திறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான இந்த 400 ஏக்கர் காணியை மக்களுக்கு வழங்காமல் திறந்த பல்கலைக்கழகம் கட்டுவதற்கு சட்டம் எப்படி இடம் கொடுத்தது?
தமிழர்களின் தலைவர்கள் என தெரிவிக்கும் வடக்கு மாகாணசபை முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரால் இதனை நிறுத்தமுடியுமா?
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்கமா? கிழக்கு பறிபோயிருக்குமா? இன்று தமிழ் மக்களின் காணி வீடு, தொழில் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்தவரை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எனவே நல்லாட்சியின் தலைவர்கள் எங்களுடன் சேர்ந்து இந்த மக்களுக்கு சேவை செய்ய தயாரா?’ என அந்த அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.