நடிகர் ரஜினிகாந்தின் 164-வது படம் ‘காலா’. தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த 28-ந் தேதி மும்பையில் தொடங்கியது. ரஜினியுடன் சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இதில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார்.
இது நெல்லையில் இருந்து மும்பை சென்று வாழ்பவர்கள் தொடர்பான கதை. எனவே, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினி வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற ‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நாளை முடிவடைகிறது. இதையடுத்து, ரஜினி நாளை சென்னை திரும்புகிறார். மும்பையில் பருவ மழை தொடங்கிவிட்டது. எனவே அடுத்து சென்னையில் ‘காலா’ படப்பிடிப்பு நடைபெறுகிறது.
சென்னையில் ஏற்கனவே தாராவி செட் போடப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. சில தினங்கள் ஓய்வுக்குப் பிறகு ரஜினி சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
இதற்கிடையே இந்த மாதம் நடுவில், அல்லது 3-வது வாரத்தில் ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விடுபட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை இந்த மாதம் சந்திப்பார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ரஜினி அவரது அரசியல் பிரவேசம் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.