வீரம் என்பது வெற்றிகளை வைத்து வழங்கப்படும் பட்டமல்ல. மாறாக அச்சுறுத்தும் களங்களை எதிர்கொள்ளும் பண்பிலும் கையாளுகின்ற பாணியிலும் அது படிந்து கிடக்கிறது. களங் களில் வெற்றி பெற்றவர்களையும் வீரர்கள் என்றே அழைக்கிறோம். தோல்வியுற்றவர்களையும் வீரர்கள் என்றே அழைக்கிறோம்.
வீரத்தின் முத்திரையாக வெற்றி தோல்வியை விட ஒருவரின் அஞ்சாமை உணர்வும், எதிர்கொள்ளும் திராணியும் சோர்வுறாத மனப்பக்குவமும் ஒருவரை வீரர் என்று அழைக்க வைக்கிறது. ஏசுபிரான் அஞ்சாதீர்கள் என்று ஆயிரம் முறை சொல்லியிருக்கிறார். நாம் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை.
பாவத்தை தவிர வேறு எதற்கும் நாம் அஞ்சத்தேவையில்லை. கடவுள் நம்மோடு இருக்கும்வரை நாம் கடவுள்பக்கம் இருக்கும்வரை நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. பகைவர்களை பழிவாங்குவது வீரம் அல்ல. அவர்களை மனமாற்றி நண்பர்களாக்குவதே வீரம்.
இது வீரத்துக்கு ஏசு வகுத்த இலக்கணம். கெத்சமணித் தோட்டத்தில் எதிரிகள் அவரை சூழ்ந்தபோது துணிவோடுதான் அவர்களை எதிர்கொண்டார். ஒரு கோழையாக அவர் ஓடி ஒளியவில்லை. பதுங்கவில்லை. தப்பிக்கவில்லை. அச்சூழலை துணிவோடு எதிர்கொண்டார்.
தான் சிலுவையில் தொங்கியபோதும் அவருடைய உதடுகளிலிருந்து உதிர்ந்த முத்துக்கள் இறைவா இவர்களை மன்னியும் (லூக் 23:34) என்பதுதான் இந்த வார்த்தைகள் வரலாற்றை புரட்டிப்போட்டன. மரணச்சூழலிலும் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்ப்பதற்கு தனிப்பட்ட வீரம் தேவைப்படும். ஏசு சிலுவையில் இறந்ததால் அவர் ஒரு கோழை அல்ல.
அவர் ஒரு வெற்றி வீரர். சாவைக்கொன்றவர், வாழ்வை வென்றவர். நாமும் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. வியாதிகளுக்கும், வறுமைக்கும், தோல்விக்கும், மரணத்துக்கும் கூட நாம் அஞ்சவேண்டியதில்லை. கடவுள் இந்த சூழல்களை நமக்கு சாதகமாக மாற்றியமைக்க கூடிய சக்தி படைத்தவர். ஏற்படுகின்ற பாதகமான சூழல்களை துணிவோடு எதிர்கொள்வோம். புனித பவுலடியார் கூறுவதுபோல ஏசுவோடு இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம் என்பதே நம் நம்பிக்கை.