பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் பிறந்த நாள் கடந்த 2-ஆம் திகதி கொண்டாடப்பட்டது. அன்று பிரபல ரேடியோ பண்பலையில் ரசிகர்கள் அவர் குறித்து பேசும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் பாடகி ஜானகி குரலில் இளையராஜா குறித்து பேசியும், பாடுவது போலவும் ஒளிபரப்பப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
ஆனால் அப்படி ஒரு நிகழ்ச்சியில் தான் பேசவே இல்லை என்று ஜானகி கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், தனியார் பண்பலையில் பேசிய ஆடியோவை ரசிகர்கள் எனக்கு அனுப்பினார்கள். அதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இது குறித்து அந்த ரேடியோ பண்பலைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, உங்கள் குரல் போல் இருந்ததால் தொலைபேசி இணைப்பை கொடுத்தோம்.
அதன் பின் தான் தெரிந்தது உங்கள் குரல் இல்லை என்று. நேரலை என்பதால் இணைப்பை துண்டிக்க முடியவில்லை.
நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது அது ஒரு ஆண் என்பது தெரியவந்தது. மேலும் அவரை எச்சரித்ததாகவும், அவர் செயலுக்கு மன்னிப்பு கேட்டதாகவும் பண்பலையில் கூறினர் என்று ஜானகி கூறினார்.
ஆனால் ஒருவர் குரலில் இப்படி பேசுவது மிகப்பெரும் மோசடி. ஒரு ஆண் பெண் குரலில் பேசுவது கீழ்த்தரமான வேலை. இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருக்கிறேன்.
தவறு செய்த நபர் குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் என்று இருந்தேன்,
ஆனால் அவர் தெரியாமல் செய்திருக்கலாம் என்பதால் மன்னித்து விட்டேன். இதுவே கடைசியாக இருக்கட்டும்.
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையில் புகார் அளித்து கடுமையாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.