வடமாகாண அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தீவிர நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடமாகாண சபையின் தற்போதைய அமைச்சரவையில் உள்ள நான்கு பேரை அப்பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
வடமாகாண அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அமைச்சரவையில் உள்ள நான்கு பேரை மாற்ற வேண்டும் என தெரிவித்து வடமாகாண சபை பிரதி அவை தலைவர் அன்றனி ஜெகனாதன் தலைமையிலான 16 உறுப்பினர் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்று கடந்த ஆண்டு முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த விடயம் தொடர்பில் சாதகமான பதில் எதையும் முதலமைச்சர் அப்போது வழங்கியிருக்கவில்லை. இந்நிலையில், தற்போது இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த ஆண்டு அமைச்சர்களை மாற்ற கோரிய உறுப்பினர்களிடம் நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது அமைச்சர்களின் மாற்றம் தொடர்பிலான அப்போதைய நிலைப்பாட்டில் தான் தற்போதும் இருக்கின்றீர்களா? என முதலமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
முதலமைச்சரின் கேள்விக்கு பெரும்பாலானோர் அதேநிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், கடந்த ஆண்டு முன்வைத்த அதே கோரிக்கையினை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கட்சி தலைமையுடனும் குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்கள் மீதான விவாதம் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.