தமிழர் தாயகம், புலம்பெயர் தேசம் என உலகப் பரப்பெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்தின் ஒரு பாகத்தினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழிநடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் நடந்து முடிந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைஅமர்வின் தொடக்க நாள் நிகழ்வில், இணைய வழிப்பரிவர்த்தனை ஊடாக தாயகத்தில்இருந்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
பல்வேறு நெருக்கடிகளையும், கண்காணிப்புக்களையும் கொண்டுள்ள நிலையில் தமிழர்தாயகத்தில் இருந்து சுதந்திரமாக எல்லா வார்த்தைகளையும் பேசிவிட முடியாதநிலையில் நாம் இருக்கின்றோம்.
வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதான ஒர்அரசியற் தீர்வுத்திட்டத்துக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். அத்தோடு தாயகத்தினது அரசியல் அணுகுமுறைகளும், புலம்பெயர் தமிழர் அரசியல் அணுகுமுறைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற காலம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
அது தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கின்ற ஓர் மையமாக அந்த புள்ளி இருக்கும்.
இதேவேளை ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் தொடர் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் இருந்து நாம் அவதானித்து வருவதோடு அச்செயற்பாடுகளுக்கு எமது பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.
தமிழர் தாயகமெங்கும் நில மீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் போராட்டம் என மக்கள் தன்னெழுச்சியாக தமது நீதிக்கான போராட்டங்களைமுன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
அத்தோடு நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்சி மாற்றங்களுக்கு நாம் வாக்களித்திருந்தாலும், அந்த நம்பிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறி வருவதாக அவர் இதன்போது குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.