யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வரும் இச் சந்திப்பில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி நாற்பதாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளும், சுகாதார தொண்டர்களும் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நூறு நாட்களை கடந்துள்ள நிலையில், நூறாவது நாள் போராட்டத்தின் போது ஏ9 வீதியை மறித்து போராடிய உறவினர்கள், ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியிருந்தனர். அதன் பிரகாரம் இன்றைய தினம் இச் சந்திப்பு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.