தமிழக அரசின் தவறுகளை சட்டப்பேரவைக் கூட்டத்தில் எடுத்துரைப்போம் என்று அ.தி.மு.க.புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அ.தி.மு.க. அணிகள் இணைப்புக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்பட்ட பின்னர், பேச்சுவார்த்தை எப்படி நடைபெற முடியும்? பேச்சுவார்த்தை என்று ஆரம்பித்த நாளிலிருந்து அந்த அணியினர் தொடர்ந்து நாடகம் ஆடி வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் பெரும்பாலான தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இதைக் கூடிய விரைவில் நிரூபிப்போம். அ.தி.மு.க.கட்சியின் சட்ட விதிப்படி தற்பொழுது பொதுச்செயாலாளர் பதவி வெற்றிடமாக உள்ளதால் அதற்கு அடுத்தபடியாக அவைத்தலைவரும், பொருளாளரும்தான் கட்சியை நடத்த வேண்டும்.
எதிர்வரும் 14 ம் திகதி காலை 9 மணிக்கு சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்த அரசின் தவறுகளையும், செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைப்போம்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.