அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் காலதாமதம் ஆவதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகையும் பிரித்தானிய பிரதமர் அலுவலகமும் மறுத்துள்ளன.
பிரித்தானிய மக்கள் தனக்கான ஆதரவை வெளியிட்டால் மட்டுமே பிரித்தானியாவுக்கு தான் வர இருப்பதாக டொனால்ட் ட்ரம் பிரதமர் தெரேசாவிடம் தெரிவித்தார் என்ற செய்தியை கார்டியன் வெளியிட்டதை அடுத்து இந்த மறுப்புச் செய்தி வெளியாகி இருக்கிறது.
அதேவேளை ஜனாதிபதி ட்ரம், விரைவில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யும் மன நிலையில் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறு புறத்தில் ட்ரம்பின் திட்டமிடப்பட்ட விஜயத்தில் மாற்றம் எதுவுமில்லை என பிரித்தானிய அதிகார வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
இலண்டனில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, மேயர் சாதிக் ஹான் மீதான விமர்சனங்களை டொனால்ட் ட்ரம் வெளியிட்டிருந்தார். இது ஏற்கனவே இருந்த ட்ரம் மீதான எரிச்சலை மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்திருந்தது.
ட்ரம்பிற்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் சம்மந்தமாக மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இத் தொலைபேசி உரையாடலில் ட்ரம் தனது விஜயம் குறித்து தெரேசா மேயுடன் பேசியிருந்தததை அவர்கள் மறுக்கவில்லை.