மட்டக்களப்பில் நடைபெற்ற வெள்ள நிவாரண ஊழல் குற்றச்சாட்டில் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு அரசாங்க அதிபரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்ற முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாட்டில் உள்ள சில அரசாங்க அதிபர்களின் இடமாற்றம் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் அதில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றமும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அதனை தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளநிவாரண ஊழல் சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணை நடத்த கோரவேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊழல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை காப்பாற்ற முயற்சிப்பதன் காரணம் என்ன? என அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே பல ஊழல்கள் நடைபெற்றதாக கூறி மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் வாய் அடைத்துப்போய் நிற்ககாரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் இருக்கும் அதிகாரி எந்த பதவியை பாவித்து அந்த ஊழலை செய்திருக்கின்றார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதோ அந்த பதவியில் இருந்து அவரை இடைநிறுத்தியோ அல்லது இடம் மாற்றியோதான் அவர் மீதான விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
தாபன விதி கோவை கூறும்போது அதே பதவியில் அவரை மீண்டும் வைத்துக்கொண்டு விசாரணைகளை மேற்கொள்வதானது உண்மைகள் வெளிவருவதை தடுப்பதாக அமையும் என்பதுடன் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் விசாரணைகளில் உண்மையை வெளியிட்டால் அவர்களை அரசாங்க அதிபர் பழிவாங்ககூடிய சூழ்நிலை இருந்தும் அது தொடர்பி்ல் கவனம் செலுத்தாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்த அரசாங்க அதிபரின் பதவியை காப்பாற்றி ஊழலுக்கு துணை போக ஏன் என அதிகாரிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
எனவே இது குறித்து மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மக்களுக்கு ஒரு முகத்தையும் அரசாங்கத்திற்கு இன்னுமொரு முகத்தையும் காட்ட முற்படுவதை நிறுத்திவிட்டு இங்குள்ள அதிகாரிகள் சுதந்திரமாகவும், உண்மையாகவும் ஊழல் அற்றவிதத்தில் பணியாற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டுமெனவும் இது தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.