வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெய்வீகச் செடி
புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என சங்ககால நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம். வெள்ளெருக்கு வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர். வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. “வேதாளம் பாயுமே வெள்ளருக்கு பூக்குமே” என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். ஆனால், தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.
எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதை வீட்டிலும் வளர்க்கலாம்.
இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது. வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள். வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள். அதனால்,அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது. தரமான விநாயகர் பிள்ளையார் பட்டியிலும், சூரியனார் கோவிலிலும் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
அங்கு போக முடியாதவர்கள், உங்களுக்கு நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து உள்ளூர் ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும். ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்கவும்.
இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்து விட்டோம். இனி, அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்.