தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்லும் போது பாராமரித்து வளர்க்க ஒப்படைக்கப்பட்ட மூன்று வயதான ஆண் குழந்தையை காட்டி பிச்சை எடுத்த பெண்ணொருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை, சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதை தடுக்கும் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிச்சை எடுக்கும் போது தன்னுடன் இருந்த குழந்தை தன்னுடையது என பெண் கூறியுள்ளார்.
எனினும் கணவன் கைவிட்டு சென்ற காரணத்தினால் தனது தங்கை குழந்தையை தன்னிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டதாக பெண் பின்னர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது பிள்ளைகள் மற்றும் இந்த குழந்தையை பராமரிக்க முடியாத நிலைமையில் தான் பிச்சை எடுத்து பிள்ளைகளை பராமரித்து வருவதாக பெண் கூறியுள்ளார்.
குழந்தையை காட்டி தான் தினமும் 8 ஆயிரம் ரூபா சம்பாதித்து வருவதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார்.
பால்ய வயதில் குழந்தைகள் இருக்கும் பெற்றோர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குழந்தையின் தாய் எப்படி வெளிநாடு சென்றார் என்பதை கண்டறிய தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.