புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் இந்த சந்திப்பு குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள், பௌத்த மதத்திற்கான இடம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படக்கூடிய உள்ளடக்கப்பட கூடாத விடயங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சி யோசனைத் திட்டமொன்றை தயாரித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் யோசனைத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியிடம் சமர்ப்பித்து இணங்கக்கூடிய, இணங்க முடியாத விடயங்கள் தொடர்பில் நேருக்கு நேர் பேசி தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.