யாழ்.மாவட்டத்திலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாதம் ஒரு முறை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இம் மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளு க்கு படிப்படியான தீர்வுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருத்து வீட்டுத்திட்டத்தினைமுன்னெடுப்பது குறித்து மக்களின் விருப்புக்களை அறிந்த பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, வடக்கின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட அபிவிருத்தி குறித்த விசேட கூட்டமொன்று நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், ராஜி சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றதோடு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த. சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , வடமாகாண அமைச்சர்களான குருகுலராஜா, சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், அரச அதிகாரிகள் படைத்தரப்பு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
முன்னரே நிகழ்ச்சி நிரல் வழங்கப்படாத நிலையில் கூட்டம் ஆரம்பித்தது. எனினும் அதன் பின்னர் சுற்றாடல், பாதுகாப்பு, வீதி அபிவிருத்தி, மீள் குடியேற்றம், காணி விடுவிப்பு, சுகாதார விடயங்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடுவதாக நிகழ்ச்சி நிரல் ஒன்று அவசரமாக கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து மக்கள் பிரதிநிதிகள் அடுத்துவரும் காலப்பகுதி மழை காலமென்பதால் வீதிகளை மீள் புனரமைக்கும் செயற்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
அத்துடன் வீதி நிர்மாணத்திற்காக கிரவல் பெறுதலிலுள்ள நெருக்கடிகள் மற்றும் இன்னோரென்ன விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அத்துடன் நிர்மாண பணிகளுக்காக மணல் பெற்றுக்கொள்வதிலுள்ள நெருக்கடிகள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது ஜனாதிபதி குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தியதோடு குறிப்பாக மணல் விவகாரத்திற்கு ஒரு வார காலத்தில் தீர்வளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு ஜனாதிபதி செயலாளர் ஒருவர், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளடங்கிய குழுவொன்றையும் நியமித்தார்.
அதனையடுத்து மீள் குடியேற்ற விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இச் சமயத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி, வலி. வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாதுள்ளமை, விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற்றத்தில் உள்ள தாமதங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன் இராணுவம் காணிகளை கையகப் படுத்தியுள்ளதால் மீள் குடியேற்றத்தில் தாமதங்கள் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நாளைய தினம் (இன்று) பாதுகாப்புச் சபை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தாங்கள் குறிப்பிடும் பகுதியிலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு துறையினரோடு கலந்துரையாடி நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேநேரம் மயிலிட்டி துறைமுக விடுவிப்பு குறித்தும் மாவை.சேனாதிராஜா எம்.பி கோரிக்கையை முன்வைத்தபோது, யாழ்.பிராந்திய படைத்தரப்பு அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைள் எடுத்து வருதாக குறிப்பிட்டனர்.
இதனையடுத்து சுமந்திரன் எம்.பி ,வட மாகாணத்தில் பொருத்து வீட்டு திட்டத்தை முன்னெடுப்பது தவரானது அத்திட்டத்தினை நிறுத்தி நிரந்தரமான கல் வீட்டு திட்டத்தினை முன்னெடுக்வேண்டும். அதுவே மக்களின் ஏகோபித்த விருப்பமாகும். அதனை தாங்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் கோரினார்.
இச் சமயத்தில் குறித்த விடயம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் அது குறித்து முடிவெடுக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். ஏனினும் சுமந்திரன் எம்.பி பொருத்து வீடு திட்டமானது வட மாகாணத்திற்கு பொருத்தமற்றது என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.
இதனையடுத்து சிறிதரன் எம்.பி இரணைத்தீவு விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இரணைத்தீவில் காணப்படும் நிலங்கள் கடற்படையினரிடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்.
இதன்போது அமைச்சர் சுவாமிநாதன், அங்கு அதிநவீன ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளமையால் அது பொது மக்களுக்கு பாதிப்பாக அமையும். ஆகவே பொதுமக்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் செய்யப்படவுள்ளது என்றார்.
இச்சமயத்தில் சிறிகரன் எம்.பி, பொது மக்கள் மீள் குடியேற்றப்பட்டால் ராடர்களின் தாக்கம் இருக்கும் என்று கூறுகின்றீர்களே அவ்வாறாயின் அங்கு எவ்வாறு கடற்படை வீரர்கள் தங்கியிருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார். அத்தோடு கேபாப்புலவு மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள்.
அவர்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் இணைதீவிலுள்ள ராடர்கள் அங்குள்ள சிறு தீவுகளுக்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். மேலும் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி கிளிநொச்சிக்கும் வருகைதந்து இதேபோன்ற ஒரு கூட்டத்தை நடாத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து சுகாதார தொண்டர் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு, பட்டதாரிகளின் பிரச்சினைகளும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்த பகுதியில் மூன்று தசாப்தகாலமாக அசாதாரண நிலைமைகள் இருந்தன. அதனை நாம் கருத்திற் கொண்டு நடடிவக்கைகளை எடுக்கவுள்ளோம். அந்த விடயம் சம்பந்தமாக உரிய கவனத்தினை செலுத்துகின்றேன் என்றார்.
மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடத்தில் பொலிஸ் துறையில் என்ன பிரச்சினைகள் காணப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பியபோது, பொலிஸ் துறைக்கான விண்ணப்பங்கள் போதியளவில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இரணைமடு குடிநீர் விவகாரம் தொடர்பாகவும் ஜனாதிபதியிடத்தில் அதிகாரிகளால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, நான் அதிகாரமிக்க ஜனாதிபதியாக பணிப்புரைகளை யாருக்கும் விடுக்கவில்லை. மாறான பாதிப்படைந்த இந்தப் பகுதியினை அபிவிருத்தியில் முன்னேற்ற வேண்டும் என கருதுகின்றேன். அதற்காக அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றேன். இன்று இந்தக் கூட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வருகை தந்து தமது கருத்துக்களை முன்வைத்தமைக்கு எனது நன்றிகள் என்றார்.