உத்தேச அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படும் கருத்து முரண்பாட்டுக்கான விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசியலமைப்பு தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைக் குழுவாக நியமிக்கப்பட்ட அமைச்சர் நிமர் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
காணி உரிமை, பொலிஸ் அதிகாரம், பௌத்த மதத்துக்குள் இடம், இறைமை உட்பட பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது யோசனைகளை தயாரித்துள்ளதாகவும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள யோசனைகளில் ஐ.தே.கட்சிக்கும், ஸ்ரீ ல.சு.கட்சிக்கும் நேர் எதிர் முரண்பாடு காணப்படுவதாகவும் இது தொர்பில் ஐ.தே.கட்சி தனது நிலைப்பாட்டை இதுவரை தெளிவுபடுத்தாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஸ்ரீ ல.சு.க.யின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்து, அது தொடர்பில் ஐ.தே.க.யின் கருத்தை தெரிந்து கொள்வது இந்த நேரடி கலந்துரையாடலின் நோக்கம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.