வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான இறுதி முடிவு இன்று (புதன்கிழமை) எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த வாரம் வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் சிறப்பு அமர்வாக நடைபெற்று இவ்விடயம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
காலை 9.30இற்கு ஆரம்பிக்கப்படவுள்ள இவ் அமர்வில், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரு அமைச்சர்களும் தன்னிலை விளக்கமளிக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்று முதலமைச்சரால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளதோடு, அமைச்சர் குருகுலராசா தற்காலிகமாக பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.