இங்கிலாந்தில் நடந்து வரும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டி விட்டது. பர்மிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2-வது அரைஇறுதியில், ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் இந்தியா, ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணியாக வர்ணிக்கப்படும் இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. அடுத்து இலங்கையுடன் 321 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்ததால் மெத்தனபோக்கே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையாக ஆடிய இந்திய அணி எதிரணியை 191 ரன்களில் சுருட்டி அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
அரைஇறுதியிலும் இந்திய அணி மிகவும் ஜாக்கிரதையாக ஆட வேண்டியது அவசியமாகும். ஒரு காலத்தில் கத்துக்குட்டி அணியாக இருந்த வங்காளதேசம் இன்று எதிரணிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. அதுவும் இந்தியா என்றாலே அவர்களது வீரர்களும், ரசிகர்களும் வெறித்தனமாகி விடுகிறார்கள். அதனால் இந்திய வீரர்கள் எந்த வகையிலும் சோடை போக மாட்டார்கள் என்று நம்பலாம்.
தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஒரு சதம், 2 அரை சதம் உள்பட 271 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதலிடம் வகிக்கிறார். மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மாவும் (181 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார். இவர்களின் சிறப்பான தொடக்கம் நீடிக்கும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை அடைய முடியும். கேப்டன் விராட் கோலி, யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ் மிடில் வரிசையில் வழக்கம் போல் அணியை தாங்கிப்பிடித்தால் போதும். ஏனெனில் இந்திய அணி பந்து வீச்சை விட பேட்டிங்கை தான் அதிகம் நம்பி இருக்கிறது.
பயிற்சியில் வங்காளதேச கேப்டன் மோர்தசா.
மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் இங்கிலாந்திடம் தோற்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியின் விளிம்பில் இருந்து மழையால் தப்பியது. கடைசி லீக்கில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்ததுடன், அதிர்ஷ்டமும் கைகொடுத்ததால் முதல் முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது.
அதே வேகத்தில் இந்திய அணியையும் நிலைகுலைய வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்பார்கள். 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வங்காளதேசம் முதல் முறையாக கால்இறுதிக்கு வந்த போது அவர்களை இந்திய அணி விரட்டியடித்தது. அப்போது ரோகித் சர்மா (90 ரன்னில் இருந்த போது தப்பித்து 137 ரன்கள் எடுத்தார்) கேட்ச் ஆன இடுப்பளவு உயரத்துக்கு வந்த பந்துக்கு நோ-பால் வழங்கப்பட்டதை வங்காளதேச வீரர்கள் சர்ச்சையாக கிளப்பினர். நடுவரும் ஒரு வீரர் போல் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டுவிட்டார் என்றெல்லாம் தீயை கொளுத்தி போட்டனர். அந்த தோல்விக்கு இப்போது வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
இந்தியாவுக்கு எதிராக அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாடுமாறு வங்காளதேச வீரர்களை அந்த அணியின் பயிற்சியாளர் ஹதுருசிங்கா அறிவுறுத்தியுள்ளார். ‘நாங்கள் இந்த அளவுக்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எங்களது திறமைக்கு ஏற்ப விளையாடினால் எந்த அணிக்கும் சவாலாக விளங்க முடியும். வங்காளதேச வீரர்கள் பதற்றமின்றி இயல்பாகவே இருக்கிறார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய போட்டி அல்ல. மிகப்பெரிய வாய்ப்பு. அதை இளம் மற்றும் மூத்த வீரர்கள் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடப்பு தொடரில் அதிக சதங்கள் அடித்த அணி வங்காளதேசம் தான். தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா ஆகியோர் சதம் விளாசியுள்ளனர். இவர்களுடன் சபிர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரும் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், மொசாடெக் ஹூசைன், கேப்டன் மோர்தசா, தஸ்கின் அகமது ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆக வங்காளதேசம் எல்லா வகையிலும் இந்தியாவுக்கு ஈடுகொடுக்க தங்களை பட்டை தீட்டியுள்ளது. அதனால் இந்த ஆட்டம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியின் போது கால்பந்து ஆடுகிறார், இந்திய கேப்டன் விராட் கோலி.
இந்தியாவும், வங்காளதேசமும் இதுவரை 32 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 26-ல் இந்தியாவும், 5-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, புவனேஷ்வர்குமார்.
வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், சபிர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், தஸ்கின் அகமது, மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.