பில்லி சூனியத்தால் தன்னை ஆட்சியிலிருந்து ஒரு போதும் விரட்ட முடியாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கெல்லாம் தான் ஒருபோதும் அஞ்சமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியின் 38ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பத்தரமுல்லையில் ஐந்து மாடிகள் கொண்ட கட்டிடத்தை நேற்று (புதன்கிழமை) திறந்துவைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”நாட்டின் வரலாற்றில் அரச ஊடகத்தை மிகவும் மோசமான ஒழுக்கமற்ற ரீதியில் பயன்படுத்திய ஒரு காலத்தில்தான் நான் பொது வேட்பாளராக போட்டியிட்டேன். அக்காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி தனது சுயாதீனத்தை இழந்திருந்தது. நான் நினைக்கின்றேன் இந்த நாட்டின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் என்னைப்போன்று சவால்களுக்கு முகங்கொடுத்திருக்க மாட்டார்கள் என்று.
அந்த நேரத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொழும்புக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு கதைப்பதற்கு பயிற்சி வழங்கி ஊடகங்களுக்கு அழைத்து வந்தனர். அவர்கள் ஊடகங்களில் கதைக்கும்போது, பின்னால் இருந்துகொண்டு யாரோ சொல்லிக்கொடுப்பது எமக்கு தெளிவாக கேட்டது.
ஆகவே, ஊடகங்கள் தான் இந்த நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த கருவி. அதனை மனதிற்கொண்டு செயலாற்றுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இன்றும் எனக்கு எதிராக அநுராதபுரத்தில் சூனியம் செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். இன்னும் எனக்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது தெளிவாகின்றது. ஆனால் நான் இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். அநுராதபுரத்தில் சூனியம் வைத்துள்ளார்கள் என்றால், அதனை யார் வைத்திருப்பார்கள் என எல்லோருக்கும் தெரியும்” என்றார்.