சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் குரல் கொடுப்போம் என்று தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ள இக்கட்சியின் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அ.தி.மு.க ஆட்சியாளர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள், இனி எப்படி அவை நடக்குமோ என்று அனைவரும் கேட்கக்கூடிய வெட்கக்கேடான நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.வினர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றனவே தவிர, ஜெயலலிதா சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் போன்று 4 வருட சிறைத்தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட வரலாறு, அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான் நடந்துள்ளது.
எனவே நாங்கள் சட்டமன்றத்துக்குச் சென்று, மீண்டும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப தீர்மானித்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.