நாட்டில் மீண்டும் யுத்தச் சூழலை ஏற்படுத்தி தேசத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் சில தீய சக்திகள் தொடராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு தடவை இனவாதத் தீயை மூட்டி விட இச் சக்திகள் செயற்பட்டு வருகின்றன.
அண்மித்த காலத்தில் இனவாதச் சக்திகள் நாட்டில் ஆங்காங்கே முக்கிய இடங்களில் அதுவும் முஸ்லிம் சமுகம் வாழும் பிரதேசங்களில் தாக்குதல்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு தீவைத்தல் போன்ற செயற்பாடுகளை முடுக்கி விட்டிருக்கின்றன.
இவ் விடயம் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு விழிப்படையச் செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் அமைச்சரவையிலும் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது இவ் விடயம் குறித்து அதிகம் பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் தரப்புக்கு கடும் தொனியில் அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறார். எந்தவொரு மத இனக்குழுக்களுக்கு எதிராக வன்முறைகள், வெறுப்புச் செயல்களில் ஈடுபடுவோர் விடயத்தில் தயவு தாட்சண்யம் பாராது சட்டத்தை பயன்படுத்துமாறு பொலிஸ் தரப்பிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள், கண்டனங்கள் உச்சக்கட்டத்தை அடைந்ததன் காரணமாக சட்டமா அதிபர் அழைக்கப்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அதன் பின்னரே பிரதமர் இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.தவறிழைப்போரது தகுதி, தராதரம், இன, மத, பின்னணி எதனையும் கருத்தில் கொள்ளாது அரசியல் பின்னணியையும் பாராது சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கையின் போது யாராவது அரசியல் தலையீடு செய்தால் அது குறித்து உடனடியாக தமது கவனத்துக்குக் கொண்டு வருமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை நாட்டில் பரவலாக முஸ்லிம்களுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் இன்று வரை சட்டம், நீதி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
சட்டம், ஒழுங்கு பேணப்படாத நிலையில் காலம் தாழ்த்தியேனும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை முஸ்லிம்களை ஆறுதல்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
நாட்டில் நல்லிணக்க முயற்சிகளுக்கு தடங்கல் ஏற்படுத்தும் விதத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால் புதிய சட்டங்களைக் கொண்டு வந்தேனும் அவற்றை அடக்குவதற்கு பின்னிற்கப் போவதில்லை என பிரதமர் அறிவித்திருக்கிறார்.
பாதுகாப்புத் தரப்பினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நீதி, நியாயம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். எந்தவொரு சமூகம் தொடர்பிலும் வேறுபாடு காட்டப்படக்கூடாது.நாட்டில் உள்ள சட்டம் சகல இனத்துக்கும் பொதுவானது. இதில் எந்தச் சமூகமும் பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது.
அதேசமயம் சட்டத்தை வேறு எவரும் கைகளில் எடுப்பதற்கும் இடமளிக்கப்படக்கூடாது. இனவாதம் புதிய திசையில் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
அரசியல் யாப்பில் காணப்படாத ஒரு விடயத்தை சட்டமாக்கும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யாப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.அதேசமயம் ஏனைய மதங்களுக்கும் சம உரிமை உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மூடி மறைப்பதிலேயே இனவாதச் சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அரசு பதவிக்கு வருவதற்கு முன்னர் இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிடக் கூடாது.
அண்மைக் காலச் சம்பவங்கள் அரசு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு சிறுபான்மை மக்கள் தள்ளிவிடப்பட்டுள்ளனர். அந்த நிலை தொடரக் கூடாது.
மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் அரசு நம்பகமாக நடந்து கொள்ள வேண்டும். நல்லாட்சி பெயரளவில் அல்ல யதார்த்தமான போக்கில் நல்லிணக்கத்தை உறுதியாக கட்டியெழுப்பும் நல்லாட்சியாக தொடரவேண்டும். இதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.