மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தன்னுடைய எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, தற்பொழுது அதிமுக ஜெ.தீபா அணி எனப் பெயர் மாற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்துள்ளதாவது: எனது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, இனிமேல் ஜெ.தீபா அணி எனப் பெயர் மாற்றப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் போயஸ்கார்டனில் நடந்த சம்பவம் தொடர்பாகப் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
எனது வளர்ச்சியைப் பிடிக்காமல் சிலர் என்மீது வேண்டும் என்றே அவதூறு பரப்பி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய எங்களுக்குக் கால அவகாசம் வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் அதிமுகவை விரைவில் கைப்பற்றுவோம். தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.