பாடசாலை மாணவர்களின் சீருடையை மாற்றியமைத்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி, அஸ்கிரிய ஶ்ரீ சந்ரானந்த பௌத்த வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவெனாக்கள் மற்றும் விகாரைகளை மையமாகக் கொண்ட கல்வி முறையானது தியாகம், கருணை மற்றும் மனிதாபிமானத்தினால் ஸ்ரீலங்காவை போஷித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமய வழிபாட்டுக்களுடன் ஒன்றிய சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அனைத்து சமயத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்பங்களுடன் சமூகம் தழுவிக்கொண்டுள்ள இணையம் மற்றும் பேஸ்புக் என்பன இன்று பிள்ளைகளின் விழுமியப் பண்புகள் மற்றும் நற்குணங்களை அழித்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், கல்வியுடன் பிள்ளைகளின் அறிவையும், ஒழுக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இணையம் மற்றும் சில ஊடகங்களினூடாக இன்று இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையே வேற்றுமையை விதைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வார்களாயின் அவர்கள் எந்த சமயத்தவராகவோ அல்லது இனத்தவராக இருப்பினும் அது அவர்களது நாகரீகம் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினையாகும் என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 166 கிறிஸ்துவ தேவாலயங்கள் கடந்த சில மாதங்களுக்குள் தாக்கப்பட்டதாக நபர் ஒருவர் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இது தொடர்பாக விடயங்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வினவியதுடன், அத்தகையதொரு நிகழ்வு பதிவாகவில்லையென அவர் தெரிவித்ததுடன், மக்களை திசை திருப்புவதற்காக இவ்வாறான பொய் பிரசாரங்கள் வெளியிடப்படுவதை தான் மிகவும் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.