வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டிருந்த அரசியல் சர்ச்சைக்கு தற்காலிகமான சமரசம் காணப்பட்டிருக்கின்றது. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப்பெறுவதாக தமிழரசுக் கட்சியினர் கூறியுள்ள நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறையை தளர்த்திக்கொள்வதாக முதலமைச்சர் கூறியுள்ள நிலையிலும் இந்த சமரசம் சாத்தியமாகியுள்ளது.
ஆனாலும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் அவைத் தலைவராக தொடர்ந்தும் சிவஞானம் நீடிக்க முடியுமா? என்பதும், முதலமைச்சருக்கு தமிழரசுக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் பழைய மரியாதையை மீண்டும் கொடுப்பார்களா? என்பதும், புதிதாக இரண்டு அமைச்சர்களை நியமிக்க வேண்டிய நிலைமை இருப்பதால் அந்த இரண்டு அமைச்சர்களை முதலமைச்சரே தீர்மானிக்கட்டும் என்று தமிழரசுக்கட்சியினர் முன்னரைப்போல் விட்டுவிடுவார்களா? அல்லது தமது தெரிவுகளையே முதலமைச்சர் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்பார்களா? போன்ற விடயங்களால் மீண்டும் வடக்கு மாகாணசபையில் சர்ச்சைகளும், குழப்பங்களும் இருக்கவே செய்யும்.
தனக்கான மரியாதை கிடைக்காது என்று தெரிந்து கொண்டும் முதலமைச்சராக சபைக்குச் செல்லும் விக்னேஸ்வரன், ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு செயலையும் மிக எச்சரிக்கையோடு செய்யவேண்டும்.
மாகாணசபையில் ஏற்பட்டிருந்த அமைச்சர்களின் ஊழல் பிரச்சினையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி இரண்டு அணியாக செயற்படும் அளவுக்கு வளர்ச்சியடைய வைத்துள்ளது. மாகாணசபையில் முதலமைச்சர் மீதான நம்பிக்கை இல்லாத பிரேரணையை தமிழரசுக் கட்சி திரும்பப்பெறாவிட்டால், நாடாளுமன்றத்தில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பாக இல்லாமல், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து ஒரு அணியாக செயற்படும் நிலைமை ஏற்படும் என்றளவுக்கு பாரதூரமாகி இருந்தது.
அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படுமாக இருந்தால், அது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தனின் மரியாதையை கேள்விக்குட்படுத்துவதுடன், அவமானத்தையும் கொடுப்பதாக அமைந்திருக்கும். ஆகவே மாகாணசபை சர்ச்சையை எவ்விதத்திலேனும் சமரசமான நிலைக்குக் கொண்டுவர வேண்டிய தேவை சம்மந்தனுக்கு ஏற்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் தாம் தனித்து செயற்பட வேண்டியிருக்கும் என்று சுரேஸ்பிரேமச்சந்திரன் கூறிய கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அவசியத்தையும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செய்ற்பட்டால்தான் ஒரளவேனும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று எதிா்பாா்க்கின்ற – நம்புகின்ற தரப்புக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் சுரேஸ் பிரேமசந்திரனின் குறித்த கருத்து தமிழரசுக் கட்சியின் இறுக்கத்தில் ஒரு தளா்வை ஏற்படுத்தியிருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அதுவரை எதிா்க் கட்சித் தலைவா் சம்பந்தன் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், தமிழரசுக் கட்சியினர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப் பெறுவதற்கும், விசாரணைகளுக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என்று ஏனைய இரு அமைச்சர்களும் எழுத்து மூலமான உத்தரவாதம் வழங்குவதற்கும் தாம் சம்மதிக்கப்போவதில்லை என்றும் பிடிவாதமாகவே இருந்து வந்தனர்.
அது மட்டுமல்லாமல் இந்தப் பிரச்சினையோடு முதலமைச்சர் மீது பல குற்றச்சாட்டுக்களையும் தமிழரக்கட்சியினர் முன் வைக்கத் தொடங்கினார்கள். அதில் ஊழல் செய்த அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் பாதுகாக்க முயற்சித்தார் என்றும், தனக்கு நெருக்கமான அமைச்சர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது அவர் விசாரணைகளில் குந்தகம் விளைவிக்காதவகையில் அவரை பதிவியிலிருந்து கட்டாய விடுமுறை எடுக்கமாறு உத்தரவிடாத முதலமைச்சர் இப்போது வேறு அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு இவ்வாறு பணிப்புரை விடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் கனடாவுக்கு சென்றிருந்தபோது அங்கு புலம்பெயர் தமிழா்களினால் இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அவலப்படுபவர்களுக்கு உதவுமாறு 50 ஆயிரத்து 150 கனேடிய டொலர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கொடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்பதை முதலமைச்சர் பகிரங்கப்படுத்தாமல் ஊழல் செய்து விட்டார் என்றும் ஒரு செய்தியை இணையத் தளத்தில் ஒரு தரப்பினர் பரப்பியுள்ளனர்.
அந்தச் செய்தி உண்மையா? – இல்லையா? என்பது ஒருபுறமிருக்க மாகாணசபையில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இவ்வாறு ஒரு செய்தி வெளியிடப்படுகின்றது என்றால் அதன் உள்நோக்கத்தை விக்னேஸ்வரன் புரிந்து கொண்டிருப்பார்.
‘எப்போது வடக்கு மாகாணசபையின் காலம் முடிவுக்கு வரும். அதுவரை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் இருந்துவிட்டு அரசியலிலிருந்து ஒதுங்கிப் போய்விட வேண்டும். யாரையும் எதிர்த்து அரசியல் செய்வதோ, மீண்டும் ஒரு தேர்தல் என்றும் தனக்கு பின்னால் ஒரு அணி என்றெல்லாம் செயற்பட முடியாது’ என்றும் தனது நெருக்கமானவர்களிடம் கூறிவந்த விக்னேஸ்வரனை மாகாணசபையில் ஏற்பட்ட சர்ச்சை சீண்டிப்பார்த்துவிட்டது என்று அவரைச் சுற்றி இருப்பவர்கள் தூபம் போடத் தொடங்கியிருக்கின்றார்கள்.
தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்கள் பேரவையை ஒரு அரசியல் கட்சியாக மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறுகின்றவர்களின் கயிற்றை விக்னேஸ்வரன் விழுங்க மாட்டார் என்று நம்பலாம்.
அதேவேளை அரசியலுக்கு எந்த மரியாதையுடன் அழைக்கப்பட்டாரோ, அதே மரியாதையுடன் அரசியலிலிருந்து விடுபட்டும் போக வேண்டும் என்பதையே தற்போதும் விக்னேஸ்வரன் கூறியிருப்பதாக அவரைச் சந்தித்தவர்கள் கூறியிருக்கின்றனர்.
இவற்றைத் தவிர வடக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருந்த பிரச்சினையை நேரடியாக எல்லோரும் ஒரே இடத்திலிருந்து பேச்சு நடத்தி தீர்வு கண்டிருக்க வேண்டும். அதை விடுத்து ஆளுக்கொரு முகாமாக இருந்து கொண்டு மத்தியஸ்த்தர்களை அனுப்பியும், கடிதங்களைப் பறிமாறியும், மதத்தலைவர்களை தூதுவிட்டும் பிரச்சினையை இழுத்துப் பெரிதாக்கி மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய நடைமுறைகளைப் பார்க்கும்போது, தலைமைகள் என்போரிடையே ஒற்றுமையும், பரஸ்பர உறவும் எந்தளவில் இருக்கின்றது என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொண்டார்கள்.
மாவை சேனாதிராசா, விக்னேஸ்வரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டே சந்தித்துப் பேசமுடியவில்லை என்றால், இவர்களிடையே எந்தளவுக்கு குரோதமும், முரண்பாடுகளும் கூர்மையடைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் முட்டாள்களா?
இவர்களா ஒற்றுமையாக தமிழ்மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தர போராடப்போகின்றார்ள்? தமக்குள்ளேயே தமது பதவிகளையும், பிடிவாதங்களையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுத்து, மக்களை கணக்கில் எடுக்காமல், இவர்கள் செயற்பட்டு தற்போது கண்டிருக்கும் தீர்வானது, தற்காலிகத் தீர்வுதான்.
ஏன் என்றால் தமக்கிடையேயான இடைவெளியையும், முரண்பாடுகளையும் பேசித் தீர்க்காமல் அவ்வாறே அவற்றைப் பாதுகாத்துக்கொண்டு தாம் சமரசம் கண்டுவிட்டதாக கூறுவது வேடிக்கையாகும். இந்த நிலைமை எவ்வளவு பலவீனம் என்பதை வடக்கு மாகாணசபையின் அடுத்த அமர்விலிருந்து தமிழ்மக்கள் பார்க்கவே செய்வார்கள். தற்போது காணப்பட்டிருக்கும் சமரசமானது நெருப்பை முற்றாக அணைக்காமல், நெருப்புக்கு மேலாக ஒரு மூடியைப்போட்டு மூடிவிட்டதாகவே இருக்கின்றது.