பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞாசார தேரரை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய ஞானசார தேரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவும் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதால் அவருக்கு எதிராக 2 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு ஞானசார தேரரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேர மாத்திரமே வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட நிலையில் ஞானசார தேரர் கைது செய்யப்படவில்லை.
கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியுடன் ஞானசார தேரர் சரணடைந்தார்.
இந்நிலையில் அவரை பிணையில் விடுதலை செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் இன்று விடுத்துள்ளதுடன், வழக்கு மீதான அடுத்த விசாரணைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.