கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக கடந்த 17-ம் திகதி காரினால் மோதப்பட்டு படுகாயங்களுக்குள்ளான சிறுவன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏ32 வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த சிறுவனை பின்புறமாக கார் மோதியதில் முழங்காவில் மகா வித்தியாலயத்தில் தரம் 7இல் கல்வி பயிலும் அ.அபினாஸ் வயது 12 உடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு கிளிநொச்சி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு குறித்த சிறுவன் கொண்டு வரப்பட்ட நிலையில் மயக்க நிலை தெளியாமலே நேற்று உயிரிழந்து உள்ளார்.
பிரஸ்தாப சிறுவனை மோதிய கார் நிறுத்தாமலே தப்பிச் சென்றுவிட்ட நிலையில் காரின் இலக்கம் தொடர்பாக முழங்காவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் தகுந்த நடவடிக்கையை பொலி ஸார் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் பொலிஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து முழங்காவில் பொது அமைப்புகளினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 10.00 மணிக்கு முழங்காவில் நகரத்தில் நடத்தப்படவுள்ளது.
குறித்த கார் நிதானமின்றிய நிலையில் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்ததை நேரில் கண்ட மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்ததுடன், காரினால் மோதப்பட்ட சிறுவன் பதினைந்து மீற்றர் தூரம் வரை தூக்கி எறியப்பட்டிருந்தார். அத்தோடு மோதப்பட்ட வேகத்தில் காரின் இலக்கத் தகடு வீதியில் கழன்று வீழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.