தமது கோரிக்கைகளுக்கு இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்வையும் முன்வைக்கவில்லையென தெரிவித்துள்ள தபால் ஊழியர்கள், இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நிர்வாக ரீதியாக தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிராகவும் இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக, நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபாற் காரியாலயங்களை உல்லாச பயணத்துறைக்கு பயன்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பு பிரதான தபால் காரியாலய கட்டிடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பிக்காமை, ஊழியர் சட்டமூலத்தை திருத்தி நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணும் கடந்த 12ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், இதுவரை தமக்கு தீர்வை வழங்க முன்வராத காரணத்தால் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் சேவையாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.