சென்னை: வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு ஃபேஸ்புக்கில் அறிக்கை விட்டபடியே அதிமுகவை கபளீகரம் செய்துவிட முடியும் என ரொம்பவே கனவு காணுகிறார் தீபா.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள்; ஜெயலலிதாவின் முகச்சாயல் இருக்கிறது.. உடனே அதிமுக தொண்டர்கள் ‘தீபா அம்மா’ என அழைத்து அவருக்கும் அரசியல் ஆசையை தூண்டிவிட்டுவிட்டனர்.
தமக்கு என்ன தகுதி இருக்கிறது? தம்மால் இதைச் செய்ய முடியுமா? என்பதையெல்லாம் ஆராயாமல் ஆதாயத்துக்காக அரசியல் களத்துக்கு வந்துவிட்டார் தீபா. முதலில் கட்சி என்றார்… பின்னர் பேரவை… தற்போது அதிமுகவின் ஒரு கோஷ்டி என உரிமை கோருகிறார்.
கொள்கை, கோட்பாடு என்னவென்றால் அதெல்லாம் இனிமேல்தான் பார்க்கனும் என பதில் சொல்கிறார். ஆனால் தினமும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏக வசனங்களுடன் கூடிய கூச்சப்படும்படியான வார்த்தைகளுடன் கூடிய அறிக்கை மட்டும் வந்துவிடுகிறது.
மக்களின் பிரச்சனைக்கு ஒரு அறிக்கைவிட்டால் போதும்.. நம்மை தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என தப்புக் கணக்கு போட்டிருக்கிறார் தீபா. அதனால்தான் சொத்துக்காக மட்டும் வீதிக்கு வந்து கொச்சையாக பேச முடிகிற அவரால் மக்களுக்காக வீதிக்கு வர முடிவதில்லை.
இரவும் பகலுமாய் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் அலையோ அலையென அலைந்து கால் நூற்றாண்டு காலமாக உரக்க முழக்கமிட்டு மக்களிடம் போகிற தலைவர்களுக்கே தேர்தல் அரசியலில் அங்கீகாரம் கொடுக்காத மண் இது. ஆனால் ஏசி வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு யாரோ எழுதிக் கொடுக்கும் அறிக்கையை ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டு கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட ஒரு இயக்கத்தை அப்படியே லாகவமாக கபளீகரம் செய்துவிடலாம் என கனவு காண்கிறார் தீபா. நிச்சயம் தமிழக மக்கள் இப்படியான குறுக்குவழியாளர்களை விரட்டியடிக்காமல் விடமாட்டார்கள்…விரைவில் தீபாவும் பாடம் கற்பார்!