சர்வதேச மனித உரிமைகள் சட்டம் இப்போது பலராலும் விமர்சிக்கப்படக் கூடியளவுக்கு உள்ளதெனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், அது எளிதான இலக்காக உள்ளது என்றும் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் சட்ட சங்கத்தில் ஆற்றிய உரையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் எம்.பியும், ஓய்வுபெற்ற கடற்படையைச் சேர்ந்த ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட மனு பற்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இதன்போது கருத்துரைத்தார்.
அந்த மனுவானது, பிரித்தானிய பிரதமர் திரேஸா அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் உள்ளது என்றும் குறிப்பட்டுள்ளார்.
கேள்விகளை கேட்டு, ஆற்றிய தனதுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பயங்கரவாதத்துக்கு எதிரான சண்டை வெற்றி பெற வேண்டுமாயின் மனித உரிமைகள் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமென பிரித்தானியா பிரதமர் இம்மாதம் கூறியிருந்தார்.
பயங்கரவாதிகளின் செயல்கள் எனத் தெரிந்துள்ள போதிலும் அவர்களுக்கு எதிரான இறுக்கமான சாட்சியங்கள் இல்லாமையால் அவர்களை நீதிமன்றில் நிறுத்தி விசாரிக்க முடியாமல் உள்ளது.
பிரதமரின் இந்தக் கூற்று அவரின் உண்மையான கோபத்தையும் விரக்தியையும் காட்டியது. ஆனால் அவரது கருத்துகள் மக்களின் குறித்த ஒரு பிரிவினருடன் ஒத்துப் போக விரும்புவதாக காட்டியது. இந்த எதிர்பார்ப்புத் தான் எனக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என அவர் கூறினார்.
இலங்கையின் முன்னாள் எம்.பியும், ஓய்வுபெற்ற கடற்படையைச் சேர்ந்த ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவினால் மனித உரிமையின் பேரவைக்கு கொடுத்த மனுவைப் பற்றி குறிப்பிட்ட அவர்,
இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பை திருத்தும்படி கட்டாயப்படுத்தியமை, கலப்பு நீதிமன்றை வலியுறுத்தியமை ஆகிய நிபந்தனைகளை இலங்கை மீது திணித்தமைக்காக எனது அலுவலகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அவர் கோரினார்.
தாம் பயங்கரவாதத்துக்கு எதிராகவே செயற்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.
எனது முதலாவது வினா: ஏன் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் இவ்வாறு இலக்கு வைத்து இலகுவாக தாக்கப்படுகின்றது? ஏன் இது பிழையாக விளக்கப்படுகின்றது? சிலர் இதற்கு ஏன் பயப்படுகின்றனர்?
இரண்டாவது வினா: பயங்கரவாதிகளை தண்டிப்பதற்காக எந்த சர்வதேச சட்டங்களை நீக்க வேண்டும் என, பிரதமர் திரேஸா கூறுகின்றார். பயங்கரவாதிகளை தண்டிக்க தடையாக உள்ள சட்டம் எது?
ஒருவருக்கு உள்ள பிரத்தியேகம் தொடர்பான சட்டமா? சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்குமான உரிமையா? கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமா? விரும்பிய சமயத்தை அனுட்டிக்கும் உரிமையா? சித்திரவதைக்கு தடையா? என செயட் ராட் அல் ஹூசைன் கேட்டார்.
பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள அவர்களை பிடிப்பதற்கு அரசாங்கங்களின் நடவடிக்கைகள் துல்லியமாக இருக்க வேண்டும். வெளிச்சம் போட்டும், போடாமலும் எல்லைகளை மூடுதல் வெறும் மாயையாகும். அது மிகவும் கெடுதியானதும் ஆகும் என அவர் கூறினார்.
மனித உரிமைகளை அத்திவாரமாக ஏற்றுக் கொள்வதே பொருளாதார அபிவிருத்தி, நிலையான சமாதானம், என்பவற்றை சாத்தியமாக்கும் எனவும் அவர் கூறினார்.