யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு இன்று (புதன்கிழமை) யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகும் சாட்சியப்பதிவில், இன்றைய தினம் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா (Dappula de Livera) முன்னிலையாகவுள்ளார்.
குறித்த கொலை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 9 பேர் எதிரிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்தோடு, 41 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்றைய தினம் ஆரம்பமாகும் சாட்சியப்பதிவு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதோடு, எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளிலும் தொடர் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இந்நாட்களில் 37 பேர் மன்றில் சாட்சியமளிக்கவுள்ளனர்.
புங்குடுதீவு பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக 12 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இருவர் அண்மையில் விடுவிக்கப்பட்டதோடு எஞ்சிய 10 பேரில் 9 பேருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீர்வின்றி தொடர்ந்து செல்லும் இவ் வழக்கை கொழும்புக்கு மாற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புகளால் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் மூவரடங்கிய சிறப்பு நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.