சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆராட்டுத் திருவிழாவும் ஒன்று. சபரி மலையில் புதிய தங்க கொடி மரம் நிறுவப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான ஆராட்டு திருவிழா இன்று (28-ந்தேதி) தொடங்கியது.
ஆராட்டுத்திருவிழாவை யொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு நெய் அபிஷேகம், 7 மணிக்கு களபாபிஷேகம், 8.40 மணிக்கு கொடிமர பூஜை நடந்தது.
காலை 9.20 மணிக்கு சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு தங்க கொடிமரத்தில் கொடியை ஏற்றி வைத்து ஆராட்டு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இரவு 7 மணிக்கு படி பூஜை, 7.40 மணிக்கு முள பூஜை, 8 மணிக்கு புஷ்பா பிஷேகம், 8.30 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.
விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ் தமன பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஜூலை 6-ந்தேதி இரவு 9.30 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும்.
7- ந்தேதி பகல் 11 மணிக்கு பம்பை நதிக்கரையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். மாலையில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
சபரிமலை கோவில் ஆராட்டுத் திருவிழாவை யொட்டி 300-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரளாக சபரிமலையில் குவிந்துள்ளனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.