நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
வைத்தியசாலையின் செயற்பாடுகளை ஆராய்ந்ததுடன், விசேட டெங்கு சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான மருத்துவ நிபுணருடனும் கலந்துரையாடி உள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையின் டெங்கு பிரிவில் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. அந்த பிரிவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
வைத்தியசாலையின் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்த ஜனாதிபதி அதற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சுக்குப் புறம்பாக உள்ளூராட்சி நிறுவனங்களால் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு தனது நேரடி பங்களிப்பை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன்பின்னர் டெங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று செயற்பாடுகளை ஜனாதிபதி கண்காணித்ததுடன் நோயாளர்களுடனும் உரையாடினார்.
ஜனாதிபதியின் இந்த திடீர் விஜயத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் பிரதேசமக்கள் பிரதிநிதிகளும்கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.