இலங்கையில் நல்லாட்சி எவ்வாறு இருக்கின்றது என்று கேட்டால், ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக வாக்களித்த மக்களே இப்போது ஆட்சியாளர்களைத் திட்டித் தீர்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நல்லாட்சியில் ஊழல், மோசடிகள் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று மக்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை இப்போது சிதைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அமைந்து இரண்டரை வருடங்களாகிவிட்டது. ஊழல் மோசடி தொடர்பாக பலர் விசாரிக்கப்படுகின்றார்கள். பல மணி நேரங்களாக விசாரணைகள் நடைபெற்றதாக செய்திகள் சொல்லப்படுகின்றது. சிலர் கைது செய்யப்படுகின்றார்கள். அவர்களும் சில மணிநேரத்திற்குள் பிணையில் விடுதலை செய்யப்படுகின்றார்கள்.
இன்னும் சிலர் மீதான விசாரணைகள் பருவகால நிகழ்வைப்போல் அவ்வப்போது நடைபெறுகின்றது. அவர்களும் விசாரணைகளுக்கு வருகை தந்து சிரித்துக்கொண்டே வெளியேறிச் செல்கின்றார்கள். விசாரணைகளுக்கு முகம் கொடுக்கக்கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சிலர் இன்னும் சுதந்திரமாக உலா வருகின்றார்கள்.
ஆட்சியாளர்களோ, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும், குப்பை மேட்டுச் சரிவிற்கும், டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கும் மட்டுமல்லாமல் காலைநிலை மாற்றத்தினால் ஏற்படும் மழை, வெள்ளத்திற்கும் முன்னைய ஆட்சியாளர்கள் மீதே குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கும் நிலைமையே தொடர்கின்றது.
நாட்டின் அமைதி சீர்குலைந்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை இன்னும் முடிவுக்கு கொண்டுவராமல் நாடு தழுவிய ரீதியில் மருத்துவம் கற்கும் மாணவர்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
கடந்த வாரம் சுகாதார அமைச்சுக்குள் போராட்டம் நடத்திய மருத்துவத்துறை மாணவர்கள் அத்துமீறி நுழைந்தார்கள் என்பதற்காக அவர்களை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கியதில் 80 மாணவர்கள் காயமடைந்தும், 40 மாணவர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியும் பெரும் பதற்றமான சூழல் ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரச எதிர்ப்பு போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் மூன்று நாட்களாக வைத்தியர்கள் நடத்திய பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையால் நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் நோயாளிகள் பெருந்துன்பத்தை எதிர்கொண்டார்கள். சில இடங்களில் மக்கள் வைத்தியசலை நிர்வாகத்தினருடன் சண்டையும் பிடிக்கும் அளவுக்கு நோயாளிகளின் பாதிப்பு இருந்தது.
இன்னொரு பக்கமாக தலை நகர் கொழும்பு உட்பட்ட நகரப்பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாமல் நகரப்பகுதிகள் நாற்றமெடுக்கும் நரகப்பகுதிகளாகத் தொடங்கியுள்ளன. இதனால் இலையான், டெங்கு நுளம்பு, அதிகரிப்பு ஏற்பட்டு நோய்த் தொற்று ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. டெங்கு நோயால் இதுவரை 250 வரையானவர்கள் பலியாகியதுடன் டெங்கு தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.
காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றோட்டம், போன்ற நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்துள்ளார்கள். இவர்களில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். சுகாதாரச் சீர்கேடான சூழலில் மழையும் பெய்வதால் நிலைமை மோசமடைந்து போகின்றது.
கழிவுகளை அகற்றுவதற்கு திடமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கொழும்புக் கழிவை அல்லது குப்பைகளை புத்தளத்தில் கொண்டுபோய் கொட்டலாமா என்றளவில் இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. மீதொட்ட முல்லையில் குப்பை மேடு சரிந்து பலர் பலியாகிய சம்பவம் நமக்கு உணர்த்திய செய்தியை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
கழிவு மற்றும் குப்பைகளை முகாமைத்துவம் செய்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிடல் இல்லை. இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும், அதுபற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்யவும், தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் முறையான அனர்த்த முகாமைத்துவம் இல்லை எனற் குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் மக்கள் முன்வைத்துள்ளார்கள்.
அதேவேளை நாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகள் அவற்றின் கால எல்லை முடிவுற்ற நிலையில் சபைகள் கலைக்கப்பட்டு ஆணையாளர்களின் கீழ் சபைகளின் நிர்வாகம் இயங்குகின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உள்ளுராட்சி சபைகளில் இல்லாததால் அச்சபைகள் வெறுமெனவே காலையில் திறந்து, மாலையில் மூடும் அலுவலகங்களாகவே மாறிவிட்டன.
சுகாதாரப் பிரச்சினைகள், குடி தண்ணீர் பிரச்சினைகள், வீதி புனரமைப்பு, வீதிக்கு வெளிச்சமூட்டுதல், போன்ற பல பிரச்சினைகளை தமது பிரதி நிதிகளைக் கொண்டு செய்து முடிக்க முடியாமல் மக்கள் இருக்கின்றார்கள். அதிகாரிகளுடன் மக்கள் ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியாது என்பதே யதார்த்தமாகும்.
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தப்போவதாக அடிக்கடி அரசாங்கத்தின் பங்காளிகள் கூறினாலும், புதிய திருத்தத்திற்கு அமைய தேர்தலை நடத்துவதா? அல்லது பழைய முறைப்படியே தேர்தலை நடத்துவதா? என்பது தொடர்பில் கட்சிகளுக்கிகடையே இன்னும் ஒரு தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் உள்ளுராட்சி சபைகளுக்கூடாக மக்களுக்கு கிடைக்கவேண்டிய பயன்கள் முடக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அரசாங்கம் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பொது மக்கள் வீதியில் இறங்கிப் போடும் நிலைமை ஏற்படலாம்.
இவை தவிர வடக்கு கிழக்கில் , காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன? நடந்தது என்பதை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் மாதக் கணக்காக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்திற்கு முன்னர் தாம் பூர்வீகமாக தொழில் செய்து வாழ்ந்த இடங்களில் தம்மை குடியேற அனுமதிக்க வேண்டும் என்று போராட்டங்களை மக்கள் பல நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
வேலையில்லா பட்டதாரிகள் மற்றொரு பக்கமாக நான்காவது மாதமாவும் தமக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடி வருகின்றார்கள்.
அந்தப் போராட்டங்களை நடத்தும் மக்களைக் கடந்து தமிழ் அரசியல்வாதிகள் தமது பயணத்தை செய்கின்றார்கள். தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் வாய் வீரம் பேசும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள், நூறு நாட்களையும் தாண்டி தமிழ்மக்கள் நடத்தும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்ததாகவோ, தமக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தை எமது மக்கள் சார்பான அழுத்த சக்தியாகவோ எவரும் பிரயோகிக்கவில்லை. அரசாங்கமும் தமிழ்மக்களின் போராட்டங்களையும், கோரிக்கைகளையும் கண்டு கொள்ளவில்லை. இப்படியே விட்டுவிட்டால் சில காலத்தில் இவர்களே தாமாக போராட்டங்களைக் கைவிட்டு எழுந்து சென்றுவிடுவார்கள்.
இவ்வாறு காலம் கடந்து செல்லும்போது போராட்டங்களை நடத்தி பயனில்லை என்ற முடிவுக்கு மக்கள் விரக்கியடைந்துவிடுவார்கள். அதன் பின்னர் இவ்வாறான போராட்டங்களில் பெருமளவில் யாரும் கலந்து கொள்ளவும் முன்வர மாட்டார்கள் என்று தமிழ்த் தலைமைகளும், அரசாங்கமும் நம்புகின்றார்கள் என்றே கருதலாம்.
இவ்வாறு முழு நாட்டிலும் பிரச்சினைகள் தீராப்பிரச்சினைகளாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதற்கிடையே இனவாதத்தை தூண்டுகின்ற அதேவேளை அரச தலைவர்களையும், பொலிஸாரையும், தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தும், தமிழரும், இஸ்லாமியரும் இந்த நாட்டின் வந்தேறு குடிகள் என்று தொடர்ந்தும் கூறிவரும் இனவாதியான பொதுபல சேனாவின்தலைவர் கலகொட அத்தே ஞானசேர தேரோவை பொலிஸார் 60 நாட்களாக பல குழுக்களாகத் தேடியும் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
அந்த முயற்சியில் பொலிஸார் தோற்றுப்போய்விட்டார்கள் என்று பொலிஸாரே கூறுவதும், பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜரான போது அவரை பிணையில் செல்ல பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்கின்றார்களா என்று நீதிமன்றம் கேட்டபோது, ஆட்சேபனை இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து ஒரே நாளில் மூன்று நீதி மன்றங்களில் ஞானசேரா ஆஜர் அதன் பின்னர் கைது, அதன் பின்னர் பிணைவிடுதலை என்று நடந்த நாடகம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து நாட்டு மக்கள் இன்னும் விடுபடவில்லை.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது நல்லாட்சி அரசாங்கம் தொடர்பாக நாளுக்கு நாள் விமர்சனங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆட்சியாளர்கள் தேர்தல்களை நடத்த பின்னடிப்பதற்கு காரணங்கள் அடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.