எமது தனித்துவம் பேணப்பட வேண்டுமென்றால் வெறும் 13வது திருத்தச் சட்டத் தீர்வை நாங்கள் முற்று முழுதுமாக எதிர்க்க வேண்டும். இதையே திருவாளர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஐயா ஆகியோர் 28.10.1987ந் திகதிய கடிதத்தால் ரஜீவ் காந்திக்கு வலியுறுத்தினார்கள். அவர்கள் வலியுறுத்தியதை நான் இன்று வலியுறுத்துவதால் என்னை ஓரம் கட்டி அரசியலில் இருந்து விரட்டிவிட பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நாவலர் சிலையினைத் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரையின் முழுவடிவம் வருமாறு,
கல்லூரி அதிபர் அவர்களே, அன்பான ஆசிரியர்களே, மாணவ மணிகளே, மற்றும் சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!
இன்றைய தினம் நாவலர் நற்பணி மன்றத்தின் அனுசரணையுடன் யாழ். மத்திய கல்லூரியில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
1822ம் ஆண்டு மார்கழித் திங்கள் 18ம் நாள் கந்தர் சிவகாமி குடும்பத்தினருக்கு கடைசி மகனாகப் பிறந்த ஆறுமுகநாவலர் அவர்கள் சிறு வயதிலேயே மூதுரை முதலிய நீதி நூல்களையும் நிகண்டு முதலிய கருவி நூல்களையும் கற்றுத்தேறி கல்வியிலுந் தமிழ்மொழி பாண்டித்தியத்திலும் சிறந்து விளங்கினார். இவரது அதீத திறமையை அறிந்து கொண்ட இவரின் சகோதரர்கள் இவரை சரவணமுத்துப் புலவர், சேனாதிராஜாப்புலவர் ஆகிய வித்துவான்களிடத்தில் தமிழ்க் கல்வியைக் கற்குமாறு அனுப்பினார்கள்.
கல்வியில் கண்ணும் கருத்துமாக இருந்து கற்றுவந்த வேளையில் அவரின் கூரிய புத்தித்திறமைக்கு உபாத்தியாயர்கள் சொல்லிக் கொடுத்த பாடல்களும் நன்னூற் சூத்திரமும் திருப்தியை உண்டாக்கவில்லை.
இவரின் கல்வித்தாகத்தை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் இவருடைய மைத்துனர் விஸ்வநாதமுதலியார் மயில்வாகனர் என்பவர், அக்காலத்தில் பெரிய பதவியில் செல்வாக்குடையவராக விளங்கியமையால், ஆறுமுகநாவலரை கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், திருவாதவூரர்புராணம் முதலிய புராணங்கள் படிக்கப்படும் கோவில்களுக்கு அழைத்துச் சென்று அங்கே புராணப் படிப்புக்களைச் செவிமடுத்து அறிவு மேலோங்கச் செய்தார்.
எனினும் இவ்வாறான புராணப்படிப்புகளில் இலக்கணப் பிழையாக அர்த்தம் சொல்லியவர்களுடனும் தவறாக அர்த்தம் சொல்லியவர்களோடும் அவர் பொருதிக் கொண்டார். அவரின் தமிழ் ஆற்றலைக் கண்ணுற்ற அவரின் சகோதரர்கள் பீற்றர் பேர்சிவல் என்னும் பாதிரியாருடைய ஆங்கிலப் பள்ளிக்கூடத்திற்கு ஆங்கிலம் கற்குமாறு அனுப்பினார்கள். அதே பாடசாலையில் தான் இன்று ஆறுமுகநாவலர் அவர்களுக்கு சிலை அமைத்து திரை நீக்கம் செய்து வைத்துள்ளோம். அதாவது யாழ் மத்திய கல்லூரியிலேயே ஆறுமுகநாவலர் அவர்கள் தமது ஆங்கிலக் கல்வியை தொடங்கினார்.
ஆங்கிலப் பாடசாலையில் அவரின் மொழித் திறமையைக் கண்ணுற்ற பேர்சிவல் பாதிரியார் அவர்கள் அவரை அதே பாடசாலையில் கீழ் வகுப்புகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கவும் மேல் வகுப்புகளுக்கு தமிழ் கற்பிக்கவும் ஒழுங்கு செய்தார். பாதிரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க வேதனம் எதுவும் பெறாது அவர் சில காலம் கற்பித்தார். ஆறுமுகநாவலர் அவர்களின் மொழித்திறமையின் காரணமாக தமிழை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும் ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்ப்பதற்கும் சுத்த செந்தமிழில் பேசுவதற்கும் இவருக்குச் சமமாக ஒருவரும் இல்லை என்று யாழ்ப்பாணம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. இதனை அறிந்த பேர்சிவல் பாதிரியார் வேதநூலாக விளங்குகின்ற பைபிளை தமிழில் மொழி பெயர்த்துத் தருமாறு ஆறுமுகநாவலரைப் பணித்தார்.
இவ்வாறு ஆறுமுகநாவலர் அவர்களால் 14 வருடங்கள் தொடர்ச்சியாக முயன்று எழுதப்பட்ட பைபிள் நூலின் தமிழாக்கம் காலக் கிரமத்தில் வெளிவந்தது. அதே காலத்தில் இந்தியாவிலும் இன்னோர் மொழிபெயர்ப்பு உருவாக்கம் பெற்றது. இவ் இரு நூல்களில் எந்த நூல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றது என்பதை ஆராய்வதற்காக இந்தியாவில் வசித்த ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் பாண்டித்தியம் பெற்ற மகாலிங்க ஐயரிடம் இவ் இரு நூல்களும் கையளிக்கப்பட்டன. அக் காலத்தில் ஆறுமுகநாவலரின் மொழிபெயர்ப்பில் கூடுதலாக யாழ்ப்பாணத்தில் பேசப்படுகின்ற தமிழ்மொழி மேலோங்கியிருந்த காரணத்தினால் அது இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு ஏற்புடையதாகாது என்ற ஒரு கருத்து பரவியிருந்த போதும் மகாலிங்க ஐயர் இரு நூல்களையும் கவனமாக ஆராய்ந்து ஆறுமுகநாவலரின் மொழிபெயர்ப்பே சிறந்தது என்ற ஒரு முடிவிற்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட 50 வருட காலம் ஆறுமுகநாவலரின் மொழிபெயர்ப்பே பைபிளின் முதலாவது தமிழ் மொழிபெயர்ப்பாக இருந்து வந்தது.
அக் காலத்தில் கிறீஸ்தவ மதத்தின் சமய நூலாக கருதப்படுகின்ற பைபிளை மொழிபெயர்ப்புச் செய்வதற்கு ஆறுமுகநாவலரும் அந்த மொழிபெயர்ப்பை ஆராய்வதற்காக மகாலிங்க ஐயரும் அமர்த்தப்பட்டிருந்தமை அன்றிருந்த கிறீஸ்தவ சகோதரர்களின் சமய காழ்ப்புணர்வற்ற தன்மையை எடுத்துக்காட்டின. ஆறுமுகநாவலர் அவர்கள் பிறசமயங்களை தூற்றுகின்ற தன்மை அற்றவராக இருந்த போதும் சைவசமய அனுட்டானங்களிலும் அதன் நெறிமுறைகளை இறுகக் கடைப்பிடிப்பதிலும் மிகவும் கராராக இருந்தார்.
சைவ மரபில் மாகேஸ்வர பூஜையில் மாகேஸ்வரர் அல்லாதவர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்ற அடிப்படை வாதத்தைக் கொண்டவராக ஆறுமுகநாவலர் இருந்த போதும் வறியவர்கள், குருடர், வசதி இல்லாதவர்கள், ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு உணவளிப்பதிலும் உதவிகள் புரிவதிலும் பின்நின்றவர் அல்ல. ஆனால் உணவு அருந்தும் போது எல்லோருடனும் இணைந்து சாப்பிடுதலாகாது என்ற கொள்கையில் இருந்தார். ஆகவேதான் தனிமையாக உணவு உண்ணும் பழக்கம் உடையவராக அவர் வாழ்ந்தார்.
ஆறுமுகநாவலரின் காலத்தில் ஏற்பட்ட கொடுமையான பஞ்சம் காரணமாக நாவலர் அவர்கள் கஞ்சித்தொட்டி தர்மத்தை புரிவதற்கு முன்வந்தார். அக் காலத்தில் இருந்த காலனித்துவ ஆட்சியாளர்கள் இங்கிருக்கின்ற செல்வங்களை ஏற்றுமதி செய்வதில் அக்கறை கொண்டார்களே ஒழிய மக்களின் பஞ்சத்தை போக்குவதற்கு ஏற்ற பொறிமுறைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. அக் காலத்தில் கஞ்சித் தொட்டி தர்மத்தின் மூலம் பத்தாயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கஞ்சித்தொட்டித் தானம் செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றியவர் என்ற பெருமையைக் கொண்டிருந்தார் நாவலர் பெருமான் அவர்கள்.
ஆறுமுகநாவலர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் புகைப்படக் கருவிகளோ அல்லது ஒளிப்படச் சாதனங்களோ அற்ற நிலையில் ஆறுமுகநாவலர் அவர்களின் உருவத் தோற்றம் பற்றி சில ஐயப்பாடுகள் ஏற்பட்டன. அதாவது இன்று நாம் திரைநீக்கம் செய்து வைத்த உருவச் சிலையில் காணப்பட்டது போன்று கழுத்திலும் தலையிலும் உருத்திராட்ச மாலை அணிந்து தீட்சைக் குறிகளுடன் கையில் புத்தகத்தை ஏந்தியபடி இருக்கின்ற இத் தோற்றமானது கேள்விக்குட்படுத்தப்பட்ட போதும் ஆறுமுகநாவலரின் மூத்த சகோதரனின் மகனாகிய கைலாசபிள்ளையால் எழுதப்பட்ட ஆறுமுகநாவலர் சரித்திரம் எனும் நூலில் வரையப்பட்ட ஓவியம் இந்த வடிவத்தை ஒத்ததாக அமைந்திருந்ததால் இது சரியெனக் கொள்ளப்பட்டது.
நாவலர் தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். நாவலர் காலத்திற்குமுன் எம்மவர் கடிதம் எழுதியது கூடச் செய்யுளிலேயே ஆகும். இன்றைய காதல் கடிதங்கள் கவிதையில் இருப்பதற்கு அந்த மரபுதான் காரணமோ நான் அறியேன்!
நாவலர் தமது கொள்கைகளில் விட்டுக் கொடுக்காத ஒரு நிலையைப் பின்பற்றி வந்தமை பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒருவர் என்னிடம் கூறினார் “ஏன் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகள் சம்பந்தமாக நாவலர் இருந்தது போல் விடாப்பிடியாக நிற்கின்றீர்கள்? சம்பந்தர் போல் விட்டுக் கொடுக்கலாமே” என்று. அதற்கு நான் “சம்பந்தர் ஐயா விட்டுக் கொடுக்கின்றாரோ இல்லையோ நான் அறியேன். ஆனால் அடிப்படை அத்திவாரத்தை நாங்கள் கெட்டியாகக் கட்டாவிட்டால் முழுக் கட்டடமுமே ஒருநாள் தகர்ந்து விழுந்து விடும். பிழையான அத்திவாரத்தில் சரியான கட்டடம் காலாகாலத்தில் நிறுவப்படலாம் என்று எண்ணுவது மடமை” என்றேன். கொஞ்சம் கொஞ்சமாக பிறகு கட்டலாம் என்பது கூட தகுந்த அத்திவாரம் இட்ட பின்னர் தான் பொருந்தும். இதனால்த்தான் சைவ சமய அனுட்டானங்களிலும் அவற்றின் நெறிமுறைகளிலும் ஒரு இறுக்கம் நாவலரால் கடைப்பிடிக்கப்பட்டது. அன்புநிலை வேறு அனுபவ நிலை வேறு. அடிப்படைகளை விட்டுக் கொடுக்காது அன்பு நிலையில் வாழலாம் என்பதை எமக்குணர்த்தியவர் நாவலர்.
தேசியம், சுயநிர்ணயம், தாயகம், தன்னாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு என்று அடிப்படைகளைக் கூறிவிட்டு ஒற்றையாட்சியின் கீழ் “13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல்” என்பதை ஏற்றுக் கொள்வதென்பது எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்று நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒற்றையாட்சி என்றவுடன் நாம் கோரிய தேசியம், தாயகம், சுயநிர்ணயம், தன்னாட்சி என்பன இருந்த இடந் தெரியாமல் மறைந்து விடுவன. 13வது திருத்தச்சட்ட முழுமையான நடைமுறைப்படுத்தலின் கீழ் வடக்கு கிழக்கு இணைப்பு கூட இடம்பெறாது. ஆகவே நாங்கள் கேட்பதில் எதையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப் பார்வை. எமது இனப்பிரச்சனையைத் தீர்க்க கொழும்பின் யன்னல், கொழும்பின் பார்வையாவன ஒரு போதும் உதவா என்பதே என் கருத்து. அரசியல் பிரச்சனையானது எங்களுக்கு ஏற்பட்ட ஒன்று. நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள். எமது நிலையில் இருந்துதான் பிரச்சனையை அணுக வேண்டுமே ஒளிய கொழும்பின் பார்வையில் இருந்தல்ல. ஒற்றையாட்சியில் 13வது திருத்தச் சட்டத் தீர்வானது என்றென்றைக்குமே தமிழ் மக்களைத் தமது அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும். ஒற்றையாட்சி எம்மை என்றென்றைக்குமே அடிமைகள் ஆக்கிவிடும். எமது தனித்துவம் பேணப்பட வேண்டுமென்றால் வெறும் 13வது திருத்தச் சட்டத் தீர்வை நாங்கள் முற்று முழுதுமாக எதிர்க்க வேண்டும். இதையே திருவாளர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஐயா ஆகியோர் 28.10.1987ந் திகதிய கடிதத்தால் ரஜீவ் காந்திக்கு வலியுறுத்தினார்கள். அவர்கள் வலியுறுத்தியதை நான் இன்று வலியுறுத்துவதால் என்னை ஓரம் கட்டி அரசியலில் இருந்து விரட்டிவிட பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிலர் சதிகள் சறுக்கியதும் சவால்களில் ஈடுபட முன்வந்துள்ளார்கள். எமது இனம் பற்றி சிந்திப்பது நாவலரின் இறுக்கச் சிந்தனைகளுக்கு ஒப்பானது என்றால் இன்று நாவலரின் சிந்தனைகளைப் பின்பற்ற வேண்டிய ஒரு கடப்பாடு எமக்கு ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தம்.
அவ்வாறான அடிப்படையில் பற்றுறுதிகொண்ட ஆறுமுகநாவலர் அவர்களின் திருவுருவச் சிலையை அவர் ஆங்கிலக் கல்வியைக் கற்ற, தமிழைக் கற்பித்த, தமிழ் விவிலிய நூலை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக இருந்த பேர்சிவல் பாதிரியார் அதிபராக இருந்த இதே கல்லூரியில் அமைத்து திரைநீக்கம் செய்வது சமயங்களின் எல்லையைக் கடந்து தமிழுக்கும் அதன் செழுமைக்கும் வழங்கப்படுகின்ற ஒரு அங்கீகாரம் என்ற வகையில் இன்றைய நிகழ்வு காலம் கடந்தும் சரித்திரத்தில் இடம்பெறும் ஒரு நிகழ்வாக அமையும் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது பழைய சிறப்புக்களையும் கல்வியின் முன்னேற்றத்தையும் காண்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என அதிபரையும் ஆசிரிய சமூகத்தையும் வேண்டி எனதருமை மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.