யாழ். நெடுந்தீவு பகுதியில் வறட்சி காரணமாகவும், உரிய பராமரிப்பு இன்றியும் குதிரைகள் உயிரிழக்கின்றதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் காணப்படும் குதிரைகளின் லயத்திலேயே இவ்வாறு குதிரைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக குதிரைகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி உயிரிழக்கின்றன. சுமார் 10 குதிரைகள் இதுவரையில் உயிரிழந்துள்ளன.
குதிரைகளின் உயிரிழப்பு தொடர்பில், நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட இதுவரையில் எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை.
குதிரை லயத்திலுள்ள குதிரைகளுக்கு உரிய பராமரிப்பு இன்மையால் மேலும் பல குதிரைகள் உயிரிழந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
எனவே, அரச திணைக்களங்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு குதிரைகளை பாதுகாப்பதற்கும் அவற்றினை சரியான முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.