முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தத் தேசிய அரசுடன் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாட்டைத் துரிதமாக முன்னேற்றி விடலாமே என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தத் தேசிய அரசில் அனைவரும் இணைந்து இந்த நாட்டின் அபிவிருத்திக்காக வேலை செய்ய வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூட எம்முடன் இணைய வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.
மைத்திரி அணி, ரணில் அணி மற்றும் மஹிந்த அணி என மூன்று அணிகளும் ஒன்று சேர்ந்தால் அதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் இந்த நாட்டுக்குக் கிடைக்காது.
நாட்டை முன்னேற்றுவதற்கு அதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது. ஆனால், அது நடக்குமா என்பது தான் சந்தேகம்.
குறுகிய அரசியல் இலாபங்களை ஒதுக்கி வைத்து விட்டு நாம் ஒன்றிணைவது தான் நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது. அதற்கான அழைப்பை நான் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கின்றேன்.
ஒருவரை ஏசிக்கொண்டு விமர்ச்சித்துக் கொண்டு அரசியல் செய்வதால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
நான் தான் ஆட்சிசெய்ய வேண்டும் என்ற மனோநிலையை ஒதுக்கி வைத்து விட்டு நாம் ஆட்சி செய்வோம் என்ற நிலைப்பாட்டுக்கு நாம் எல்லோரும் வர வேண்டும்.
அவ்வாறில்லாது போலியாக நாம் தேசபக்தி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அது பொய்யான நாட்டுப்பற்றாகும். எம்மைவிட பின்நின்ற எத்தனையோ நாடுகள் முன்னேறி விட்டன.
ஆனால், நாம் பின்னோக்கியே தான் சென்று கொண்டிருக்கின்றோம். எமது பிழையான அரசியலே இதற்குக் காரணம்.
இந்த அரசியல் கலாசாரம் மாற வேண்டும். அப்போதுதான் நாமும் ஏனைய நாடுகளைப்போல் முன்னுக்கு வர முடியும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.