புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன.
சட்டத்தரணியும் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட பீடாதிபதியுமான வீ.ரி.தமிழ்மாறன் சாட்சியம் வழங்கும் போது அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் என்பவரும் மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரும் எனது காரில் புங்குடுதீவு வந்தனர். அங்கு அவர்கள் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். சந்தேகநபர் ஒருவர் சரணயடையவுள்ளார் என்று அவர்கள் எனக்குத் தெரிவித்தனர்.
அதன்பின்னர் சுவிஸ்குமார் குடும்பத்துடன் (மனைவி, கைக்குழந்தை, தாய்) சரணடைந்தார். பொலிஸாரின் வாகனம் வரத் தாமதமடையும் என்பதால் எனது வாகனத்தில் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றோம். அங்கு ஒரு வாங்கில் அவர்களை உட்கார வைத்தனர். நான் வீடு சென்றுவிட்டேன்.
மறுநாளே சந்தேகநபரான சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்டது என்பது தெரிந்தது. சரணடைந்தவர் மீது குற்றச்சாட்டோ, முறைப்பாடோ இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார் என்று சீனியர் டி,ஐ.ஜி. அப்போது நடைபெற்ற மக்களுடனான கூட்டத்தில் தெரிவித்தார்.
கூட்டத்தில் மக்கள் சுற்றிவளைத்ததால் சீனியர் டிஐஜி புங்குடுதீவு கடற்படையிடம் என்னை ஒப்படைத்தது. அங்கிருந்து காங்கேசன்துறை சென்று பின்னர கொழும்பு சென்றேன் என்று அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஏனைய சந்தேகநபர்கள் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டினர். இதனால் இந்தச் சாட்சியத்தை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
எனினும் பின்னர் அரச தரப்பு சட்டத்தரணிகளின் வேண்டுகையின் அடிப்படையில் சாட்சியத்தைத் தொடர அனுமதித்தனர்.